பாம்பன் புதிய ரயில் பாலத்தில் நடைபெற்று வரும் இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி.
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் நடைபெற்று வரும் இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி.

பாம்பன் கடலில் புதிய ரயில் பாலத்துக்கான இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி தொடக்கம்

Published on

ராமேசுவரம்: பாம்பனில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு, 2019-ல் காணொலி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

2021-க்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கரோனா பரவல், பருவமழை, கடல் சீற்றம் ஆகிய காரணங்களால் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்க இயலவில்லை.

தற்போது பாம்பன் புதிய ரயில் பாலப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பாம்பன் கடலில் கட்டப்படும் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலத்தின் பணிகள் மார்ச் 2022-க்குள் நிறைவடையும் என்று உறுதிபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் புதிய பாம்பன் பாலத்தில் கர்டர்கள் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. 60 அடி நீளத்தில் புதிய பாம்பன் பாலத்தில் மொத்தம் 101 இணைப்பு கர்டர்கள் பொருத்தப்படும். பாலத்தின் நீளம் 2,078 மீட்டர். 99 தூண்களைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் இந்த புதிய பாலம் எழுப்பப்படுகிறது.

மேலும் பாலத்தின் மையப்பகுதியில் இரு பக்க மேடைகள் அமைக்கப்பட்டு கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் இயங்கக்கூடிய செங்குத்து தூக்குப்பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற உள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in