

உடுமலையில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் கனரக வாகனங்களால் விபத்து நிகழும் அபாயம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. குவாரிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கும் கட்டுமானப் பணிகளுக்கான பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன.
போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் பிற வாகனங்களுக்கும், மக்களுக்கும் ஆபத்தைவிளைவிக்கக்கூடிய வகையில் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் முருகானந்தம் என்பவர், உடுமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், ‘‘மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து கற்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு முறையான வாகனப்பதிவு எண்கள் இல்லை. பாரம் ஏற்றிச் செல்லும்போது பின்பக்க தடுப்புக் கதவுகள் திறந்த நிலையிலேயே உள்ளன.
இதனால் கற்கள் உருண்டு சாலைகளில் விழுவதால், பின்னால் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. முறையாக ஆய்வு செய்து விதிமீறும் வாகனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என குறிப்பிட்டுள்ளார்.