

நிறுவனங்கள், கடைகள், அலுவலகங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
கோவை மாநகரில், குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும், தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்கவும் சிசிடிவி கேமராக்கள் காவல்துறையினருக்கு பெரிதும் கைகொடுக்கின்றன. மாநகர காவல்துறையின் சார்பில் போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் பொது இடங்களில் 560-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
இந்நிலையில், அனைத்து கடைகள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என, தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதுதொடர்பாக, காவல்துறையினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதில், ‘‘உங்களது கடை, அலுவலகம், நிறுவனத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். பொருத்தாவிட்டால், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல, கடை, நிறுவனம், அலுவலகத்தின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்’’ எனக் கூறப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாநகர காவல்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘‘பல நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. சமீபத்திய பல்வேறு வழக்குகளில் சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகள் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினருக்கு பயன்பட்டுள்ளது. எனவே, கேமராக்களை பெயரளவுக்கு பொருத்தி வைக்காமல், அதில் பதிவாகும் காட்சிகளை குறிப்பிட்ட நாட்களுக்கு சேமித்து வைக்க வேண்டும் எனவும் தனியார் நிறுவனங்கள், கடைகள், அலுவலகங்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.
தற்போது, அரசு உத்தரவைத் தொடர்ந்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைகளுக்கு சென்று கேமராக்களை பொருத்த அறிவுறுத்தி வருகிறோம்’’ என்றனர்.
மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் கூறும்போது, ‘‘மாநகரில் உள்ள பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதை தீவிரப்படுத்தி வருகிறோம். அதன் பயன்கள் குறித்து தனியார் நிறுவனங்களுக்கும் எடுத்துரைத்து வருகிறோம்’’ என்றார்.