Published : 19 Jan 2022 09:49 AM
Last Updated : 19 Jan 2022 09:49 AM

கரோனா தொற்றுப் பரவல் எதிரொலியாக ஓசூர் சந்தையில் பட்டன் ரோஜா விலை சரிவு

ஓசூர் மலர் சந்தையில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள பட்டன்ரோஜா மலர்கள்.

ஓசூர்

கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் எதிரொலியாக ஞாயிறு முழுஅடைப்பு மற்றும் கோயில்களில் பூஜை இன்றி ஓசூர் மலர் சந்தையில் மலர்களின் விற்பனை குறைந்தது. குறிப்பாக ஒரு கிலோ பட்டன் ரோஜா விலை ரூ.10-க்கும் கீழே குறைந்துள்ளதால் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஓசூர், பாகலூர், தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மலர் சாகுபடிக்கு ஏற்ற வகையில் தரமான மண் வளத்துடன் குளுமையான தட்பவெட்ப நிலை நிலவுகிறது. இதனால் ஆண்டு முழுவதும் இப்பகுதியில் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு லாபம் ஈட்டி வருகின்றனர். குறிப்பாக இங்கு விளையும் பட்டன் ரோஜா பூ வகைகள் தினமும் சென்னை மலர்ச்சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஓசூர் பகுதியில் தென் மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய காலங்களில் வழக்கத்தை விட அதிகமழை பொழிந்துள்ளது.

இதனால் ஓசூர் பகுதியில் பயிரிடப்படும் பட்டன் ரோஜாவின் சாகுபடி பரப்பளவு இருமடங்காக அதிகரித்துள்ளது. உற்பத்தியும் பெருகி உள்ள நிலையில் கரோனா எதிரொலியாக மலர் சந்தையில் பட்டன் ரோஜா விலை ஒரு கிலோ ரூ.10 என விற்கப்படுகிறது. இதனால் பயிரிட செலவானதொகைகூட கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஓசூர் தோட்டக்கலைத்துறை அதிகாரி கூறுகையில், ஓசூர் வட்டத்தில் மழை நன்கு பெய்துள்ளதால் சுமார் 260 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டுநீர் பாசன முறையில் பட்டன் ரோஜா பயிரிடப்பட்டுள்ளது. இவற்றுடன் தளி. கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய வட்டங்களிலும் அதிக பரப்பளவில் பட்டன் ரோஜா பயிரிடப்பட்டுள்ளதால் மகசூல் அதிகரித்துள்ளது. அதேவேளையில் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் எதிரொலியாக ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் கோயில்களில் பூஜை நிறுத்தம் ஆகிய காரணங்களால் மலர்களின் விற்பனை குறைந்து விலை சரிவடைய காரணமாக உள்ளது.

தற்போது மொத்த விற்பனையில் ஒரு கிலோ பட்டன் ரோஜா விலை ரூ.10-க்கும் கீழே விற்பனையாகி வருகிறது. இதனால் மலர்உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x