வறட்சி, கூலித்தொழிலாளர் பற்றாக்குறை எதிரொலி; மோகனூர் சுற்றுவட்டாரத்தில் மரப்பயிர்களுக்கு மாறும் கரும்பு விவசாயிகள்

மோகனூர்  அருகே மேல்பரளி கிராமத்தில் உள்ள விளைநிலத்தில் நீண்டகால பயிரான தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மோகனூர் அருகே மேல்பரளி கிராமத்தில் உள்ள விளைநிலத்தில் நீண்டகால பயிரான தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

பரமத்தி வேலூர், மோகனூர் சுற்றுவட்டாரத்தில் வறட்சி, தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் கரும்பு சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்து தென்னை உள்ளிட்ட நீண்ட கால பலன் தரும் மரப்பயிர்களுக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், மோகனூர் வழியாக காவிரி ஆறு பாய்ந்து செல்வதால் இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது. கரும்பு, வாழை மற்றும் வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பு சாகுபடி அதிகம் உள்ளதால் மோகனூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் வெல்லம் உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் வறட்சி, உரங்களின் விலை உயர்வு, கூலியாட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கரும்பு சாகுபடி பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இதற்கு மாற்றாகவும் சிரமம் குறைவான தென்னை அல்லது தேக்கு, சவுக்கு, யூக்கலிப்டஸ் போன்ற மரப்பயிர்களுக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர்.

இதுகுறித்து மோகனூர் பகுதியைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் கூறியதாவது:

மோகனூர் சுற்றுவட்டாரத்தில் 20 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இதற்கு தண்ணீர் தேவை, பராமரிப்பு செலவு உள்ளிட்டவை அதிகம் தேவைப்படுகிறது. தொடர் வறட்சி மட்டுமன்றி கூலியாட்கள் பற்றாக்குறையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

மேலும், கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கினாலும் உடனடியாக பணம் கிடைப்பதில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடியை சந்திக்கின்றனர்.

இதனால், விவசாயிகள் கரும்பு, வாழை உள்ளிட்ட குறுகிய கால பணப் பயிர்களை கைவிட்டு நீண்ட காலம் பலன் தரும் தென்னை, தேக்கு, சவுக்கு போன்றவற்றுக்கு மாறத் தொடங்கியுள்ளனர், என்றனர்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து வருவது உண்மை தான். தண்ணீர் பற்றாக்குறை, வெட்டுக்கூலி பிரச்சினை இதற்கு முக்கிய காரணங்கள். இந்தாண்டு தற்போதைய நிலவரப்படி 8,253 ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டுகளில் 22 ஆயிரம் ஹெக்டேர் வரை கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருந்தது. கூலியாட்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கரும்பு வெட்டும் இயந்திரம் விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in