

சென்னை: சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வடமாநில இளைஞரை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் மதின் மொல்லா (33). சென்னை தண்டையார்பேட்டையில் தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 15-ம் தேதி காலை புது வண்ணாரப்பேட்டை வஉசி நகர் மார்க்கெட் மெயின் ரோடு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாலையில் ரப்பர் பேண்டால் சுற்றப்பட்ட பணம் இருந்ததை கண்டு எடுத்தார். எண்ணிப் பார்த்தபோது ரூ.52 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.
பணத்துக்கு அப்பகுதியில் உள்ள யாரும் உரிமை கோராததால், மதின் தனக்கு தெரிந்த நபரான அப்பகுதியைச் சேர்ந்த ஜீவகுமார் (54) என்பவரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் அந்தப் பணத்தை புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த பணம் யாருடையது என போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சாலையில் கேட்பாரற்று கிடந்த பணத்தை எடுத்து நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த மதின் மொல்லாவை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.