

சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: பெண்களுக்கு சமத்துவமும், சரியான வாழ்வுரிமையும், சுதந்திரமும் கிடைக்க வேண்டுமெனில் அவர்களுக்குப் படிப்புரிமை, பணியாற்றும் உரிமை, சொத்துரிமை, ஆளும் உரிமை - ஜனநாயக ஆட்சியில் சம பங்கு பெறக்கூடிய உரிமை - அனைத்தும் கிடைக்க வேண்டும் என்றார் பெரியார்.
தமிழ்நாட்டில் - ஊராட்சித் தேர்தல்கள் முடிந்துள்ளன. நகராட்சித் தேர்தல்கள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பல நகராட்சிகள், மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்ட - அரசு அறிவிப்புக்குப்பின், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகளுக்கு பெண்களே மேயர்களாக வருவர் என்ற அறிவிப்பு சமூகநீதி - பாலியல் நீதிக்குக் கிடைத்த சரியான வாய்ப்பு. 90 ஆண்டுகளுக்கு முன்பு கோரிய கோரிக்கை இன்று செயலாக்கப்பட்டிருக்கிறது. பெரியார் 90 ஆண்டுகளுக்கு முன்கோரிய கோரிக்கை - ‘50 சதவிகித இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்’ என்றார்.
அதை அப்படியே செயலாக்கி ஆணை பிறப்பித்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இதில் கூட பொது - ஆதிதிராவிடர் - அவற்றிலும் பெண்கள் என்று இப்படி ‘அனைவருக்கும் அனைத்தும்‘ என்ற சமூகநீதி பிரகடனத்துக்கு செயல்வடிவம் கொடுத்துள்ளார்.
அனைவரும் வீடு வீடாக இந்த சாதனையின் முக்கியத்துவத்தை விளக்கிட வேண்டும். முதல்வருக்கும், திமுக அரசுக்கும் ‘நன்றித் திருவிழா’ நடத்திட வேண்டிய மவுனப் புரட்சியின் மற்றொரு மைல்கல்இது. இவ்வாறு அறிக்கையில் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.