தமிழக அரசின் அறிக்கையில் எம்ஜிஆர் குறித்து உண்மைக்கு மாறான தகவலை வெளியிடுவதா? - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

தமிழக அரசின் அறிக்கையில் எம்ஜிஆர் குறித்து உண்மைக்கு மாறான தகவலை வெளியிடுவதா? - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரைப் பற்றி உண்மைக்கு மாறான பல தகவல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை பற்றி உண்மைக்கு மாறான பல தகவல்களைத் தமிழக அரசு 16-ம் தேதி வெளியிட்டுள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தன்னை முதல்வராக்கிய கட்சியின் பொருளாளரான எம்ஜிஆரையே, கணக்கு கேட்டார் என்பதற்காகக் கட்சியை விட்டே நீக்கி, ஏறிய ஏணியை எட்டி உதைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

திமுக அரசின் செய்திக்குறிப்பில், கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி மூலமாக தனக்கென்று தனியிடம் பெற்றவர் எம்ஜிஆர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் சினிமாவில் நுழையவே முடியாத நிலையில் கோவையில் இருந்து திருக்குவளைக்கு சென்றவர் கருணாநிதி.

இதை அறிந்த எம்ஜிஆர் அவரை மீண்டும் கோவைக்கு வரவழைத்து மருதநாட்டு இளவரசி படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு வழங்கினார். கருணாநிதி எழுதிய வசனங்களை எம்ஜிஆரும், சிவாஜி கணேசனும் தங்களின் படங்களில் உச்சரித்ததால்தான் அதற்கு மரியாதை கிடைத்தது. இந்த உண்மைகளை மறைத்து வரலாற்றைத் திருத்தி எழுதியுள்ளனர்.

அதேபோல, 1987-ம் ஆண்டு டிச. 25-ம் தேதி மருத்துவத்துக்காகப் பல்கலைக்கழகம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பல்கலைக்கழகத்துக்கு “டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்” என்று பெயர் வைக்க அமைச்சர்கள் முடிவு செய்தனர். ஆனால், அதனை எம்ஜிஆர் மறுத்தார். ஆனால், முத்துசாமியும் (தற்போதைய அமைச்சர்), மற்ற அமைச்சர்களும், எம்ஜிஆரை வற்புறுத்திச் சம்மதிக்க வைத்தனர்.

இருந்தபோதிலும் திறப்பு விழாவுக்கு முதல் நாள் டிச. 24-ம் தேதி எம்ஜிஆர் மறைந்தார். அதன்பின், 1989-ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி வேறு வழியின்றி “தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்” என்று பெயரில் குடியரசுத் தலைவரை வைத்து பல்கலைக்கழகத்தை திறந்தார்.

இதனை தற்போதைய வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமியிடமும், மூத்த அரசியல் தலைவர் ஹண்டேவிடமும் முழு விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். எனவே, திமுக அரசு தமிழக அரசின் சார்பாக வெளியிடப்படும் அறிக்கைகளில் வரலாற்றைத் திரிக்காமல் வெளியிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in