Published : 19 Jan 2022 07:55 AM
Last Updated : 19 Jan 2022 07:55 AM

உள்ளாட்சி அமைப்புகளில் துணைத் தலைவர் பொறுப்புகளிலும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளைத் தனித் தொகுதிகளாகவும் சென்னை உட்பட 11 மாநகராட்சிகளைப் பெண்களுக்கான தொகுதிகளாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், விளிம்புநிலை மக்களை அதிகார வலிமையின் வழி மேம்படுத்தும் சமூகநீதி அரசாக தமிழக அரசு விளங்குகிறது என்பதை மீண்டும் நிறுவியுள்ளது. இதனை அறிவித்த தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் விசிக சார்பில் எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பஞ்சாயத்து ராஜ் - நகர் பாலிகா சட்டத்தின் அடிப்படையில் சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று விசிக சார்பில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதுதொடர்பாக 2006-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் போடப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், சமூகநீதி பற்றுகொண்ட திமுக அரசு பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி சென்னை, ஆவடி, தாம்பரம் ஆகிய மாநகராட்சிகளை தனித்தொகுதிகளாக அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆதிதிராவிட பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால் தமிழக வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் சென்னையின் மேயராக வரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதேபோல, உள்ளாட்சி அமைப்புகளில் துணைத் தலைவர் பொறுப்புகளிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.இது தொடர்பாக உயர் நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிர் ஆகியோருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை மறுப்பதற்கு நிர்வாக காரணங்களை சுட்டிக்காட்டக் கூடாது என தெளிவுபடுத்தியுள்ளது. இதை கருத்தில்கொண்டு உள்ளாட்சி அமைப்புகளில் துணைத் தலைவர் பொறுப்புகளிலும் இடஒதுக்கீடு அளித்து சமூக நீதியை முழுமையாக நிலைநாட்ட வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x