புதுச்சேரியில் மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு காவலர் காலிப் பணியிடங்களுக்கு இன்று உடற்தகுதித்தேர்வு: அதிகாரிகளுக்கு கடும் கட்டுப்பாடு

காவலர் தேர்வு நடக்கவுள்ள கோரிமேடு காவலர் பயிற்சி மைதானத்தில், ஏற்பாடுகளை உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்யும் ஏடிஜிபி ஆனந்தமோகன். படம்: செ. ஞானபிரகாஷ்
காவலர் தேர்வு நடக்கவுள்ள கோரிமேடு காவலர் பயிற்சி மைதானத்தில், ஏற்பாடுகளை உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்யும் ஏடிஜிபி ஆனந்தமோகன். படம்: செ. ஞானபிரகாஷ்
Updated on
1 min read

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகுபுதுச்சேரியில் காவலர் காலிப் பணியிடங்களுக்கு இன்று முதல்உடற்தகுதித்தேர்வு தொடங்கு கிறது.

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள காவலர் - 390, ரேடியோ டெக்னீசியன் - 12 மற்றும் டெக் ஹேண்டலர் - 29 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஆட்சியில் பெறப்பட்டன. அப்போது ஆளுநர் கிரண்பேடிக்கும், அமைச்சரவைக்கும் இடையில் எழுந்த மோதலால் இத்தேர்வு தள்ளிப்போனது. சுமார் மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜன. 19) முதல் தேர்வு தொடங்குகிறது.

இத்தேர்வுக்கு மொத்தம் 17,227 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் காவலர் பணிக்கு - 13,970, ரேடியோ டெக்னீஷியன் - 229, டெக் ஹேண்ட்லர் - 558 என 14,787 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2,440 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில் காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான உடற்தகுதித்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு இன்று காலை 6 மணிக்கு கோரிமேடு காவலர் பயிற்சி மைதானத்தில் தொடங்கி பிப்ரவரி 21-ம் தேதி வரை நடக்கிறது. நாள்தோறும் தேர்வில் கலந்துகொள்ள 750 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வு காலை 6, 8, 10 மணி என 3 பிரிவுகளாக நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கூடுதல் போலீஸ் டிஜிபி ஆனந்தமோகன், டிஐஜி மிலிந்த் தும்ப்ரே ஆகியோர் ஆய்வு செய்தனர். மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு காவலர் தேர்வு நடப்பதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி பொருத்தப்படுகிறது. முறைகேடு நடந்தால் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள். செல்போன் கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது. அதிகாரிகள் சுழற்சி முறையில் அடிக்கடி மாற்றப்படுவார்கள் என்றும் ஏடிஜிபி ஆனந்தமோகன் குறிப்பிட்டுள்ளார்.

விண்ணப்பதாரர்களுக்கு 24 மணி நேரத்துக்குள்ளான ரேபிட் பரிசோதனை முடிந்து கரோனா சான்று கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று உறுதியானால் அவர்களுக்கு மாற்று தேதியும் தெரிவிக்கப்படவுள்ளது. ஆள்மாறாட்டத்தை தவிர்க்கவும் கடும் கட்டுப்பாட்டு சோதனைகளும், ஆவணங்களை சரிபார்க்கவும் உள்ளனர். விண்ணப்பதாரர்கள் சரியான ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

காவல்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் விசாரித்ததில், “காவல் துறையில் அதிக பணியிடங்கள் காலியாக உள்ளன.

முதற்கட்டமாக தற்போது இத்தேர்வு நடக்கிறது. நடப்பாண் டுக்குள் காவல்துறையில் ஆயிரம் பணியிடங்களை நிரப்ப உள்ளோம்” என்று குறிப்பிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in