

திருநெல்வேலியில் நடைபெற்றுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாளையங்கோட்டை மண்டலத்தில் ரூ.14.95 கோடியில் வ.உ.சி விளையாட்டு மைதான மறுகட்டமைப்பு பணிகள், கொக்கிரகுளம் பகுதியில், அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள், ரூ.85.56 கோடியில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலைய மறுகட்டமைப்பு பணிகள், சந்திப்பு பகுதியில் பாதாள சாக்கடை மூலம் கழிவு நீர் தடையின்றி செல்வதற்கான அமைக்கப்பட உள்ள பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தச்சநல்லூர் பகுதியில் பாதாளசாக்கடை திட்ட பணிகள், நயினார்குளம் கரை சீரமைப்பு பணிகள், ராமையன்பட்டியில் ரூ.14.50 கோடியில் பழைய குப்பைகளை தனியாக பிரித்து மக்கும் குப்பைகளை நவீனமுறையில் உரமாக்கும் திட்டம் ஆகியவற்றையும் பார்வையிட்டு, திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் பா. விஷ்ணுசந்திரன், மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், பொறியாளர் (பொ) நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.