

சென்னை: சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளை தனித் தொகுதிகளாகவும் சென்னை உட்பட 11 மாநகராட்சிகளை பெண்களுக்கான தொகுதிகளாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பெண்கள் ஆகிய விளிம்புநிலை மக்களை அதிகார வலிமையின்வழி மேம்படுத்தும் ஒரு சமூகநீதி அரசாக தமிழக அரசு விளங்குகிறது என்பதை மீண்டும் நிறுவியுள்ளது. இத்தகைய அறிவிப்பைச் செய்துள்ள தமிழ்நாடு அரசுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பஞ்சாயத்து ராஜ் - நகர் பாலிகா சட்டத்தின் அடிப்படையில் சென்னை மாநகராட்சியைத் தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அதற்காக வழக்கும் தொடுத்தோம். அந்த கோரிக்கையை பரிசீலிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது கடந்த 2019ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தோம்.
சமூகநீதி மீது பற்றுக்கொண்ட திமுக தலைமையிலான அரசு தற்போது பஞ்சாயத் ராஜ் சட்டப்படி சென்னை ஆவடி தாம்பரம் ஆகிய மாநகராட்சிகளைத் தனித்தொகுதிகளாக அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி ஆதிதிராவிடப் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால் தமிழ்நாட்டு வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் சென்னையின் மேயராக வரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது மேலும் சிறப்பு வாய்ந்த நடவடிக்கையாகும். சமூக நீதியை செயல்படுத்துவதில் முதல்வர் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமாரப் பாராட்டி வரவேற்கிறோம்.உள்ளாட்சி அமைப்புகளில் துணைத்தலைவர் பொறுப்புகளிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது எமது நீண்ட நாள் கோரிக்கை. அது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியே வழக்கு தொடுத்திருந்தோம் ( WP 22979/2011). அந்த மனுவை விசாரித்த உயர்நீ திமன்றம் 26.03.2012 அன்று அளித்த தீர்ப்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிர் ஆகியோருக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் பாகம் ஒன்பதில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மறுப்பதற்கு நிர்வாகக் காரணங்களை சுட்டிக் காட்டக் கூடாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளின் துணைத்தலைவர் பதவிகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசும் ஒரிசா மாநில அரசு போல சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவித்ததுபோல, துணைத்தலைவர் பொறுப்புகளிலும் இட ஒதுக்கீடு அளித்து சமூக நீதியை முழுமையாக நிலைநாட்டவேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.