Published : 18 Jan 2022 07:40 PM
Last Updated : 18 Jan 2022 07:40 PM

வட மாநிலத்தவராக இருந்தாலும் தமிழர் போல பிரதமர் நடந்து கொள்கிறார்: செல்லூர் கே.ராஜு

செல்லூர் கே.ராஜு | கோப்புப் படம்.

மதுரை: ''வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழர் போல் நடந்து கொள்கிறார்'' என்று பிரதமர் மோடி பற்றி முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியுள்ளார்.

மன்னர் திருமலை நாயக்கரின் 439-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் செல்லூர் கே.ராஜு கூறுகையில், "பாதுகாப்பு கருதியே குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார வாகன ஊர்திக்கு அனுமதி இல்லை எனச் சொல்கிறார்கள். தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கூட அலங்கார வாகன அணிவகுப்பு இல்லை. திமுக அமைச்சரவையில் 6 அமைச்சர்கள் ஒருவர் கூட மன்னர் சிலைக்கு மரியாதை செலுத்த வரவில்லை.

தமிழக கலாச்சாரத்தை பிரதமர் பிரதிபலித்து வருகிறார். வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழர் போல பிரதமர் நடந்து கொள்கிறார். தமிழகத்துக்கு எதிராக பிரதமர் நடத்து கொள்ளவில்லை. தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ளவில்லை, தமிழர்களின் பணியை உலகுக்கு எடுத்துக்காட்டும் விதமாக இந்திய அரசு செயல்படுகிறது.

தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்காது என திடமாகக் கூறுகிறேன். இந்த அளவுக்கு எந்தவொரு பிரதமரும் தமிழர்களின் கலாச்சாரம், பெருமையை உலகுக்குச் சொன்னதில்லை. பிரதமர் மோடி தமிழர்களின் பெருமையை உலக அரங்கில் நிலை நிறுத்தி வருகிறார்.

சிறுபான்மை வாக்கு சிதறிவிடும் என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ரகசியமாக பாஜகவுடன் உறவு வைத்துள்ளார். பிரதமர் மோடி தமிழகத்திற்கு ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் தந்துள்ளார். அதற்குக் காரணமாக இருந்தது அதிமுக அரசு'' என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x