

கோவை: கோவை-பழனி, பழனி-மதுரை என இருவேறு எண்களில் இயக்கப்படுவதால் பெரும்பான்மை பயணிகளுக்கு தெரியாமல கோவை-மதுரை இணைப்பு ரயில் இயங்கிவருவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவையிலிருந்து மதுரைவரை இயக்கப்படும் இணைப்பு ரயில் சேவை கடந்த நவம்பர் 10-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து தினமும் மதியம் 2 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06463), மாலை 4.30 மணிக்கு பழனி சென்றடைகிறது. பின்னர், பழனியில் இருந்து தினமும் மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06479), இரவு 7.40 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து தினமும் காலை 7.20 மணிக்கு புறப்படும் ரயில் (எண்:06480), காலை 10.10 மணிக்கு பழனி வந்தடையும். பின்னர், பழனியில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்படும் ரயில் (எண்:06462) மதியம் 1.15 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடைகிறது.
இந்த ரயில்கள், போத்தனுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, புஷ்பத்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கொடைரோடு, வாடிப்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்த வழித்தடத்தில் போத்தனூர் ரயில் நிலையம் வரை சேலம் ரயில் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. கிணத்துக்கடவு முதல் பொள்ளாச்சி வரை பாலக்காடு கோட்டத்தின்கீழும், பொள்ளாச்சிக்கு பிறகு மதுரை கோட்டத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது. இருவேறு ரயில்கள் போல் கணக்கு காட்டுவதற்காக, பழனிக்கு பிறகு இந்த இணைப்பு ரயிலின் எண் மாறுபடுவதால், கோவை ரயில் நிலையத்தில் இந்த ரயில் குறித்து அறிவிக்கும்போது இது பழனி வரை செல்லும் ரயில் என்றே அறிவிப்பு செய்கின்றனர்.
மேலும், அனைத்து ரயில்களின் எண்ணை குறிப்பிட்டால் அவை புறப்படும் நேரம், தற்போது அந்த ரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது என்பதை அறிய உதவும் https://enquiry.indianrail.gov.in/mntes/ என்ற இணையதளத்திலும், இந்த ரயில் கோவையிலிருந்து மதுரை வரை செல்லும் இணைப்பு ரயில் என்பது தெரியாது.
ஒரே ரயிலாக இயக்க வேண்டும்
இதுதொடர்பாக ரயில் பயணிகள் கூறும்போது, “பெரும்பான்மை பயணிகளுக்கு இப்படி ஒரு கோவை-மதுரை இணைப்பு ரயில் இருப்பதே தெரியாது. இந்த ரயில் குறித்து அறிந்த பயணிகள் மட்டும், கோவை ரயில் நிலையத்திலேயே மதுரைக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கிக்கொள்கின்றனர். அறியாதவர்கள் பழனி சென்றடைந்தபிறகு அறியும்போது, அங்கு இறங்கி மீண்டும் டிக்கெட் பெற வேண்டியுள்ளது. இப்படி இருந்தால் இந்த இணைப்பு ரயிலை இயங்குவதற்கான நோக்கம் நிறைவேறாது. எனவே, கோவை-மதுரை இணைப்பு ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக வேண்டுமெனில் அந்த ரயிலை ஒரே ரயிலாக, ஒரே எண்ணில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இணையதளத்தில் தேடும்போது மக்களுக்கு முழுவழித்தடம் தெரியவரும்”என்றனர்.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “கோவை-பழனி ரயில் மதுரை வரை இணைப்பு ரயிலாக இயக்கப்படுவது குறித்து ரயில்நிலையங்களில் அறிவிப்பு மூலம் பயணிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்”என்றனர்.