Published : 18 Jan 2022 06:52 PM
Last Updated : 18 Jan 2022 06:52 PM
சென்னை : தென்னிந்திய அளவிலான உடல் கட்டழகு மற்றும் உடல் கட்டமைப்பு போட்டியில் தங்கம் வென்ற சாதனைப் பெண் சங்கீதாவுக்கு
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"திருப்பத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண் அண்மையில் தென்காசியில் நடைப்பெற்ற தென்னிந்திய அளவிலான உடல் கட்டழகு மற்றும் உடல் கட்டமைப்பு போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார் என்ற செய்தி கேட்டு மிகவும் பெருமையாக இருந்தது. சாதனைப் பெண் சங்கீதாவுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை, மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தன் கணவர் உயிரிழந்த நிலையிலும், தனியார் தோல் தொழிற்சாலையில் வேலைப் பார்த்துக்கொண்டு, தனது இரு பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்து காப்பாற்றியும், வாழ்வில் போராடி கொண்டிருக்கும் இந்த நிலையிலும், தனது விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும், ஆண்களுக்கு நிகராக உடல் கட்டமைப்பு பயிற்சியை மேற்கொண்டு, இன்று சாதித்து காட்டியிருக்கும் சிங்கப்பெண் சங்கீதாவுக்கு என் மனப்பூர்வமான ஆசீர்வாதங்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே போன்று சாதனையாளர் சங்கீதாவுக்கு இலவசமாக பயிற்சி அளித்து உதவிய, பயிற்சியாளர் சகோதரர் குமரவேலுக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சங்கீதாவைப் போன்று இன்னும் எத்தனையோ பெண்கள் தங்கள் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் எந்த துறையானாலும் சரி, எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் சரி, தைரியமாகவும், விடா முயற்சியோடும் எந்த ஒரு செயலை செய்யும்போது, அதில் கண்டிப்பாக வெற்றி பெற்று சாதித்து காட்ட முடியும் என்று அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதனைப் பெண் சங்கீதா தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு, உயரிய விருதுகளை பெற்று, நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று எல்லா வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்."
இவ்வாறு சசிகலா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!