

புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் மூடப்படுவதாகவும், வரும் 31-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படும் என்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுவையில் புத்தாண்டுக்குப் பிறகு கரோனா தொற்று வெகுவேகமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டின் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியது. இந்த நிலையில் நேற்றும் தொற்றால் சிகிச்சைப் பலனின்றி 3 பேர் இறந்துள்ளனர். புதுவையில் பரிசோதனை செய்யும் 3 பேரில் ஒருவருக்குத் தொற்று உறுதியாகி வருகிறது. இது பரிசோதனையில் 34.72 சதவீதமாகும்.
புதுவை மாநிலத்தில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஏற்கெனவே 1 முதல் 9-ம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டாலும், கரோனா தடுப்பூசி போடப்படுவதால் 10,11,12-ம் வகுப்புகள் நடந்து வந்தன. இந்நிலையில் தொற்று அதிகரிப்பால் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் கல்வியமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.
அதையடுத்து அவர் கூறுகையில், "கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கும், கல்லூரிகளுக்கும் இன்று முதல் ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படும். இதுவரை பள்ளிகளில் 60 சதவீத மாணவர்களுக்கு சிறார் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது மாணவர்களுக்குத் தடுப்பூசி முகாம் நடத்தப்படும்" என்று குறிப்பிட்டார்.