அனுமதி மறுப்பு: தைப்பூச நாளில் வெறிச்சோடிய திருப்பரங்குன்றம் கோயில் வளாகம்
மதுரை: கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தைப்பூசத் திருநாளில் திருப்பரங்குன்றம் கோயில் வளாகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருநாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் வாசலில் நின்று கோவில் நுழைவாயிலில் உள்ள கதவு முன்பு நின்று வேல் முற்றும் மயிலுக்கு பூஜை செய்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
தமிழர் திருநாளாம் தை 1-ஆம் தேதி கடந்த 14 முதல் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு நான்கு நாட்களுக்கு அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் விடுமுறை அளித்துள்ளது. இதனால் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், அதனைத் தொடர்ந்து தற்போது தைப்பூசம் என்பதால் இன்றுடன் 5- நாட்களாக திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் இன்றி அனைத்து காலபூஜைகளும் ஆகம விதிப்படி நடைபெறுகிறது.
தைப்பூசம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவர். ஆனால், கரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று பக்தர்கள், பொதுமக்கள் அனுமதியின்றி அனைத்துக் கால பூஜைகளும் காலை முதல் நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக பால்காவடி, பறவைக் காவடி, அன்னக்காவடி, அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பக்தர்கள் எவரும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு திருப்பரங்குன்றம் கோயிலுக்கு தடையால் வருகை தரவில்லை.
சாமி தரிசனம் செய்வதற்கும் நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்கு பல்வேறு வெளி மாநிலங்கள் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் சாமி தரிசனம் செய்யவும் நேர்த்திக்கடனை செலுத்த பக்தர்கள் வருவர். ஆனால், இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக உள்ளூர் பக்தர்கள் மட்டுமே கோயில் முன்பு நின்று சாமி தரிசனம் செய்து கோயிலுக்குள் பக்தர் அனுமதி இல்லாததால் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். சாமி தரிசனம் செய்ய இன்று ஏராளமான ஆன்மிகச் சுற்றுலா செல்லும் பக்தர்கள் மற்றும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் இல்லாததால் ஒருசில பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மட்டுமே கோயில் முன்பு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
