

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரோனா பரிசோதனைக்காக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஜெயா என்ற 17 வயது பெண் சிறுத்தை உயிரிழந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணியாற்று ஊழியர்கள் 76 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உயிரியல் பூங்கா நிர்வாகம், மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு தொற்றுப் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும் தேதி குறிப்பிடாமல் வண்டலூர் உயிரியல் பூங்காவும் மூடப்பட்டது.
இந்த நிலையில், பூங்காவில் இருந்த 17 வயதான ஜெயா என்ற பெண் சிறுத்தை கரோனா பரிசோதனைக்காக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தது. ஆனைமலையிலிருந்து கொண்டு வரப்பட்டு 13 ஆண்டாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சிறுத்தை ஜெயா.
கடந்த வாரம் இதே பூங்காவில் இருந்த விஷ்ணு என்ற ஆண் சிங்கம் உயிரிழந்த நிலையில், தற்போது சிறுத்தை ஒன்று பலியாகியுள்ளது. மேலும், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்கினங்களுக்குத் தொற்றுப் பரவாமல் தடுக்கவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் பூங்கா நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு விலங்குகளையும் உரிய இடைவெளிகளில் வைத்து பராமரிப்பது, அவற்றுக்கென தனித்தனியாக பணியாளர்களை நியமித்து கண்காணிப்பது, பணியாளர்களுக்கு கவச உடைகளை வழங்குவது, விலங்குகளுக்கு அளிக்கப்படும் உணவுகளை பரிசோதித்து கொடுப்பது என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.