திருப்பூரில் நேற்று நடந்த உற்பத்தி நிறுத்த போராட்டத்தால் வெறிச்சோடிக் காணப்பட்ட பின்னலாடை  நிறுவனம்.
திருப்பூரில் நேற்று நடந்த உற்பத்தி நிறுத்த போராட்டத்தால் வெறிச்சோடிக் காணப்பட்ட பின்னலாடை நிறுவனம்.

நூல் விலை உயர்வு, பஞ்சு பதுக்கலை தடுக்கக் கோரி பின்னலாடை நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம்: திருப்பூரில் முதல் நாளில் ரூ.200 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

Published on

திருப்பூர்: நூல் விலை உயர்வையும், பஞ்சு பதுக்கலையும் தடுக்கக் கோரி ஜனவரி 17, 18-ம் தேதிகளில் பனியன் நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெறும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று போராட்டம் தொடங்கியது.

பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளான, நூல்விலை கடந்த ஓராண்டாக உயர்ந்துவருவதால், தொழில் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஜனவரி மாதத்தில் நூல் விலை ஒருகிலோவுக்கு ரூ.30 உயர்ந்தது.

பின்னலாடைத் தொழில் பாதிக்கப்பட்டால், போட்டி நாடுகளுக்கு வர்த்தகம் சென்றுவிடும். எனவே,பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள 11 சதவீத வரியை நீக்கவேண்டும். பஞ்சை பதுக்கி, விற்பதை தடுக்க வேண்டும். பஞ்சு இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு நீக்க வேண்டும். பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இப்போராட்டம் நடைபெறுகிறது.

திருப்பூரில் உள்ள அனைத்து சங்கங்களும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. முதல் நாளில் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி என மொத்தம் ரூ.200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக தொழில் துறையினர் தெரிவித்தனர்.

பொங்கல் விடுமுறை முடிந்து,திருப்பூருக்குத் திரும்ப வேண்டியதொழிலாளர்கள், இப்போராட்டத்தால் ஊருக்குத் திரும்பவில்லை.

இதற்கிடையில், திருப்பூர் பனியன் துணி உற்பத்தியாளர் சங்க (நிட்மா) அவசர ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவர் ரத்தினசாமி தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், பருத்தி, பஞ்சு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்தக் கோரி இன்று (ஜன.18) தொழில் அமைப்பினருடன் இணைந்து திருப்பூரில் ரயில் மறியல் செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பல்லடத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “நூல் விலை உயர்வை தமிழக அரசுகட்டுப்படுத்த வலியுறுத்தி, பாஜக சார்பில் வரும் 21-ம் தேதி, திருப்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். 25-ம் தேதி தொழில்துறையினரை அழைத்து சென்று, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in