

வால்பாறை பகுதியில் சாலைகளில் சிங்கவால் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் அரிய வகை விலங்கான சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக, வால்பாறையை அடுத்த புதுத்தோட்டம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் உள்ளன. இங்கு கிடைக்கும் குறிப்பிட்ட மரத்தின் பழங்களை விரும்பி உணவாக உட்கொள்கின்றன. சிங்கவால் குரங்குகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
புதுத்தோட்டம் பகுதியில் சிங்கவால் குரங்குகள் சாலையை கடக்க, மரங்களுக்கு இடையே கயிற்றுப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும், சில நேரங்களில் சாலைகளில் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. இதனால், வாகன விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, "வால்பாறையில் பருவமழைக்கு பின், வனப் பகுதி மிகவும் செழிப்பாக உள்ளது. வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தேவையான அளவுகிடைக்கிறது. வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் நடமாடுவதால், இந்தப்பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும். வாகனங்களை நிறுத்தி அவற்றுக்கு பொதுமக்கள் உணவு வழங்கக்கூடாது" என்றனர்.