Published : 18 Jan 2022 03:38 PM
Last Updated : 18 Jan 2022 03:38 PM

கோவையில் போலி ஆவணங்கள் தயாரித்து பணம் வசூலித்து மோசடி - மாநகராட்சி ஊழியர்கள் இருவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு

போலி ஆவணங்கள் தயாரித்து பணம் வசூலித்து மோசடி செய்ததாக, மாநகராட்சி ஊழியர்கள் இருவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக வீடு கட்டியவர்கள், அந்த வீட்டுக்கு வரி நிர்ணயம் செய்ய மாநகராட்சியின் வருவாய்ப் பிரிவில் விண்ணப்பிக்க வேண்டும். உதவி வருவாய் அலுவலரால் விண்ணப்பம் பெறப்பட்டு, உரிய ஆவணங்களில் பதிவு செய்யப்படும். பின்னர், கட்டிடத்தை வரி வசூலர்கள் நேரில் அளவீடு செய்து அறிக்கை சமர்ப்பிப்பர். கட்டிடத்தை கட்டுவதற்காக மாநகராட்சியிடம் சமர்ப்பிக்கப்பட்ட வரைபடத்தில் இருக்கும் பரப்பளவை விட, கூடுதல் பரப்பில் கட்டப்பட்டிருந்தால் விதிமீறலுக்காக வரிவசூலர், அபராத தொகை நிர்ணயம் செய்வார். அந்த தொகையை, தொடர்புடைய கட்டிடத்தின் உரிமையாளர் மண்டல அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் வரிவசூலராக பணியாற்றிய யுவராஜ்(40), உதவி வருவாய் அலுவலர் சத்யபிரபா(55) ஆகியோர் போலி ஆவணங்களை தயாரித்து, கட்டிட உரிமையாளர்களிடம் இருந்து அபராத தொகையை வசூலித்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக, கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா அளித்த புகாரில், ‘‘வரிவசூலர் யுவராஜ், உதவி வருவாய் அலுவலர் சத்யபிரபா ஆகியோர், போலி ஆவணங்கள் மூலம் 61-வது வார்டில் 18 பேரிடம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்து 205 தொகையையும், 64-வது வார்டில் 17 பேரிடம் ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 225 தொகையையும் வசூலித்துள்ளனர். இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார். இதன்பேரில், யுவராஜ், சத்யபிரபா ஆகியோர் மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்களை தயாரித்தல், ஊழல் தடுப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x