

கோவை குனியமுத்தூர் அருகேதனியார் குடோனில் புகுந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட பிள்ளையார்புரம், கோவைப்புதூர், குனியமுத்தூர், பி.கே.புதூர், சுகுணாபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகள் அருகே அண்மையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.
குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியின் பின்புறம் வந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த நாயை கடந்த டிசம்பர் 29-ம்தேதி அடித்துக்கொன்றது. இந்நிலையில், சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டுகள் வைத்தும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், பி.கே.புதூரில் உள்ள தனியார் குடோனின் உள்ளே சிறுத்தை இருந்தது நேற்று காலை தெரியவந்தது. இதையடுத்து, குடோன் உரிமையாளர் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை பதுங்கி இருப்பதை உறுதி செய்தனர். பின்னர்,மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார் தலைமையில் சுமார்40-க்கும் மேற்பட்ட வனப்பணியா ளர்கள், தீயணைப்புதுறையினர் இணைந்து குடோனை சுற்றி வளைத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த குடோனை விட்டு சிறுத்தை வெளியேற முடியாதபடி, சுற்றிலும் வலைகளைக் கொண்டு தடுப்பு அமைத்தனர்.
இதுகுறித்து மாவட்ட வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் கூறும்போது, “குடோனின் இரண்டு நுழைவு வாயில்களும், கூண்டுகள் வைக்கப்பட்டு அதனுள் இறைச்சி வைக்கப்பட்டுள்ளது. குடோனில் 6 அறைகள் உள்ளதால் உள்ளே புகுந்து சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்துவதில் சிக்கல் உள்ளது. இரவு நேரத்தில் பொதுவாக சிறுத்தை தானாக வெளியே வரும்,அப்போது கூண்டுக்குள் சிக்கும் எனஎதிர்பார்க்கிறோம். இன்று (நேற்று) இரவு முழுவதும் காத்திருந்த பிறகும் சிறுத்தை வெளியே வரவில்லை என்றால், உயர் அதிகாரிகளுடன் பேசி மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.