தமிழகத்துக்கு மழை வெள்ள நிவாரணமாக ரூ.6,230 கோடியை விரைவில் விடுவிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்துக்கு மழை வெள்ள நிவாரணமாக ரூ.6,230 கோடியை விரைவில் விடுவிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்துக்கு மழை நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக கோரப்பட்ட ரூ.6,230.45 கோடியை விரைவாக விடுவிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2021ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்து சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது குறித்து தங்களுக்கு நினைவூட்டுகிறேன். நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக மத்திய அரசிடம் இருந்து ரூ.6230.45 கோடி நிதியுதவி கோரி தமிழக அரசால் மூன்று முறை கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்றின் 3-ம் அலை ஏற்கெனவே பரவியுள்ள சூழலில் தொற்றை எதிர்த்து போராடுவதற்கான முயற்சிகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கான பெரும் நிதித்தேவை, மாநில நிதிநிலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே வேளையில் கரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு விதிமுறைகள் ஏற்கெனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தை மேலும் கூட்டுவதாக அமைந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கும் மாநில நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே, வெள்ளச் சேதம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டால், மாநில மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். தமிழகத்துக்கு விரைவாக நிதியுதவி அளிக்க தாங்கள் உதவ வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்று டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து தமிழக முதல்வரின் கடிதத்தை வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in