ஊரடங்கின்போது முகக்கவசம் அணியாததை தட்டிக்கேட்ட காவலரை தாக்கிய மாநகராட்சி ஊழியர்: படம் பிடித்த செல்போனையும் உடைத்தெறிந்தார்

ஊரடங்கின்போது முகக்கவசம் அணியாததை தட்டிக்கேட்ட காவலரை தாக்கிய மாநகராட்சி ஊழியர்: படம் பிடித்த செல்போனையும் உடைத்தெறிந்தார்
Updated on
1 min read

சென்னை: முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவரை முகக்கவசம் அணிய சொன்ன காவலரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தாக்கியதோடு, படம் பிடித்த காவலரின் செல்போனையும் உடைத்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சென்னை எம்ஜிஆர் நகர் காவல் நிலைய காவலர் வாழவந்தான் சக போலீஸாருடன் காசி தியேட்டர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் வந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டார். இருவரும் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் என்பது தெரியவந்தது. மேலும், முகக்கவசம் அணியாதது குறித்து கேள்வி எழுப்பியதுடன், இருவரையும் காவலர் வாழவந்தான் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த அசோக் நகரைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவகிருஷ்ணன், வாக்குவாதம் செய்ததுடன் வாழவந்தானை தாக்கி, செல்போனையும் பிடுங்கி எறிந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த எம்ஜிஆர் நகர் போலீஸார் சுகாதார ஆய்வாளர் சிவகிருஷ்ணன், அவரது நண்பரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மதுபோதையில் இதுபோன்று செய்துள்ளார். இனி இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டேன் என எழுதி கொடுத்துள்ளார். இதனால், அவரை விடுவித்துள்ளோம். அவரின் செயல்பாடு குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடக்கிறது’ என்றனர்.

இதற்கிடையில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் முகக்கவசம் அணியாமல் அதை தட்டிக் கேட்ட காவலருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in