Published : 29 Apr 2016 09:25 AM
Last Updated : 29 Apr 2016 09:25 AM

நட்சத்திர தொகுதி: அடித்தட்டு மக்கள் அதிகம் உள்ள உளுந்தூர்பேட்டை

அடித்தட்டு மக்களை அதிகம் கொண்ட உளுந்தூர்பேட்டை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதி அந்தஸ்தை பெற்றுள்ளது.

ஒருங்கிணைந்த தென்னாற் காடு மாவட்டமாக இருந்தபோது உளுந்தூர்பேட்டை தொகுதி 1951-ம் ஆண்டு உருவாக்கப் பட்டது. 1992-ம் ஆண்டு தென் னாற்காடு மாவட்டம் கடலூர், விழுப்புரம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. உளுந்தூர் பேட்டை தொகுதி விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. திருவெண்ணெய்நல்லூர், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் ஆகிய ஒன்றியங்கள் இந்தத் தொகுதிக்குள் உள்ளன.

உளுந்தூர்பேட்டை தொகுதி வழியாக சென்னை - திருச்சி, சென்னை - சேலம் என இரு நெடுஞ்சாலைகள் செல்கின்றன. தொழில் நிறுவனங்கள் போதிய அளவில் இல்லாததுதான் இந்த தொகுதியின் முக்கிய குறையாக உள்ளது. தமிழகத்தில் அதிக விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளில் உளுந்தூர்பேட்டையும் ஒன்று. உள்ளூரில் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாததால், உளுந்தூர்பேட்டை தொகுதி மக்கள் வெளிமாநிலங் களுக்கு செல்லும் நிலை உள்ளது. மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு போன்ற அடிப்படை தேவைகள் இத்தொகுதியில் இன்னும் நிறைவேற்றப்படாமலே உள்ளன.

திமுக தொடங்கப்படுவதற்கு முன்பாக 1952 முதல் 1967 வரை நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் கந்தசாமி படையாட்சி 2 முறையும், சுதந்திரா கட்சியின் மனோன்மணி ஒரு முறையும் இங்கு வெற்றி பெற்றுள்ளனர். 1967-ல் திமுக ஆட்சி அமைத்தபோது, உளுந்தூர்பேட்டையில் திமுக வேட்பாளர் சுப்ரமணியம் வெற்றி பெற்றார். தொடர்ந்து 1980 தேர்தலிலும் உளுந்தூர்பேட்டை திமுக வசமானது. ஆனால், 1984-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் உளுந்தூர்ப் பேட்டையில் அதிமுக வெற்றி பெற்றது. 1984 முதல் 2011 வரை நடந்த 6 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுகவும், திமுகவும் மாறி மாறி தலா 3 முறை வெற்றி பெற்றுள்ளன. இங்கு தற்போது 1 லட்சத்து 37 ஆயிரத்து 4 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 32 ஆயிரத்து 294 பெண் வாக்காளர்களும், 38 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.

திமுக, அதிமுகவுக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு இல்லாத உளுந்தூர்பேட்டை தொகுதியை எப்படியும் கைப்பற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இங்கு களமிறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 2006 தேர்தலில், தனித்து நின்றே இங்கு 30 ஆயிரம் வாக்குகளை தேமுதிக பெற்றது. அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டதற்கு தேமுதிக பிரித்த 30 ஆயிரம் வாக்குகள்தான் காரணம்.

2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணியில் அதிமுக வேட்பாளர் ஆர்.குமரகுரு 1 லட்சத்து 17 ஆயிரத்து 794 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் முகம்மது யூசுப் 53 ஆயிரத்து 508 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்துடன் அதிமுக வெற்றி பெற்றதற்கு தேமுதிகவின் வாக்கு வங்கி முக்கிய பங்கு வகித்தது. இதனால்தான் அடித்தட்டு மக்களை அதிகமாகக் கொண்ட உளுந்தூர்பேட்டை தொகுதியை விஜயகாந்த் தேர்வு செய்துள்ளார்.

திமுக அணியில் உளுந்தூர்பேட்டை தொகுதி மமகவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், விஜயகாந்த் அங்கு களமிறங்குவதாக தகவல் கிடைக்கவே, மமகவே அந்த தொகுதியை திரும்ப ஒப்படைத்தது. இதையடுத்து திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ குமரகுரு மீண்டும் போட்டியிடுகிறார்.

உளுந்தூர்பேட்டையில் வன்னியர் வாக்கு வங்கி கணிசமான அளவு உள்ளது. விஜயகாந்த் களமிறங்கியதால், அவருக்கு நிகராக பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ராமமூர்த்திக்கு பதிலாக வழக்கறிஞர் கே.பாலுவை வேட்பாளராக்கியது பாமக. ஒருபுறம் பாமகவின் பலமான பாலு, அதிமுகவின் குமரகுரு, திமுகவின் வசந்தவேல் என கடினமான போட்டி விஜய காந்துக்கு ஏற்பட்டுள்ளது.

மொத்த வாக்காளர்: 2,69,336
ஆண்கள்: 1,37,004
பெண்கள்: 1,32,294
திருநங்கைகள்: 38

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x