Published : 18 Jan 2022 09:54 AM
Last Updated : 18 Jan 2022 09:54 AM

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் பாரபட்சம் - ரேஷன் கடை முற்றுகை: காவல் துறையினர் பேச்சுவார்த்தை

மிளகு பாக்கெட்டில் இருந்த பருத்தி கொட்டை.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை ஒன்றியத்தில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் ரேஷன் கடை ஊழியர்கள் பாரபட்சம் காட்டு வதாக கூறி கடையை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோனேரிகுப்பத்தில் உள்ள ரேஷன் கடையில் கோனேரிகுப்பம், ஒட்டப்பட்டி, சின்ன குட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 650-க்கும் மேற்பட்டோருக்கு ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு விடுபட்டவர்களுக்கு ஜனவரி 17-ம் தேதி (நேற்று) வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக விடுபட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் நேற்று காலை 7 மணி முதல் கடை முன்பாக காத்திருந்தனர்.

ரேஷன் கடை ஊழியர்கள் காலை 8 மணிக்கு கடையை திறந்து அப்பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் முன்னிலையில், அவருக்கு ஆதரவான 35 பேருக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி விட்டு மீண்டும் ரேஷன் கடை பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால், மணிக்கணக்கில் காத்திருந்த குடும்ப அட்டைதாரர் கள் ஆவேசமடைந்து ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘கோனேரிகுப்பம் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக காலை 7 மணி முதல் நூற்றுக் கணக்கான மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க காத்திருந்த நிலையில், கடையை திறந்த அரை மணி நேரத்தில் கட்சி பிரமுகரின் பரிந்துரை பேரில் பின்னால் வந்த 35 பேருக்கு மட்டுமே பொங்கல் தொகுப்பு வழங்கிவிட்டு பொருட்கள் தீர்ந்து விட்டதாக கூறி ஊழியர்கள் கடையை மூடிவிட்டு சென்றுவிட்டார்.எனவே, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் பாரபட்சம் காட்டும் ரேஷன் கடை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர்.

இந்த தகவலறிந்த ஜோலார் பேட்டை காவல் துறையினர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விடுபட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையேற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மிளகுக்கு பதில் ‘பருத்தி கொட்டை’

பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், சீரகம், மிளகு, முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் கடந்த 4-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை முடிவடைந்தாலும், இம்மாதம் இறுதி வரை குடும்ப அட்டைதாரர் களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு இடங்களில் சர்ச்சை வெடித்து வருகிறது. குறிப்பாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் கரும்புகள் வழங்கப்படவில்லை என்றும், சில இடங்களில் தரமற்ற கரும்பு, 3 அடி உயரமுள்ள கரும்பு வழங்கப்படுவதாக குடும்ப அட்டைதாரர்கள் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் சமீபத்தில் படத்துடன் செய்தியை வெளியிட்டது.

இந்நிலையில், கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட மோட்டூர் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட 100 கிராம் மிளகுக்கு பதிலாக ‘பருத்தி கொட்டையும், மஞ்சள் மற்றும் சீரகத்தில் மரத்தூள் கலந்திருப்பதாக கூறிய பொது மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்களை கீழே கொட்டி நேற்று திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘கந்திலி ஒன்றியம், மோட்டூர் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்றதாக உள்ளன. 100 கிராம் மிளகு பாக்கெட்டில் பருத்தி கொட்டை உள்ளது. மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம் பாக்கெட்டில் மரத்தூள் கலந்துள்ளன. இதேபோல், பக்கிரிதக்கா, கோணாப்பட்டு போன்ற பகுதிகளிலும் குறைபாடுகள் உள்ளன.

இது குறித்து ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டால், அவர்கள் பொறுப்பில்லாமல் பதிலளிக்கின்றனர்.

எதற்கும் உதவாத பொங்கல் பரிசு தொகுப்பு எங்களுக்கு எதற்கு வழங்குகிறீர்கள் எனக்கூறி அதை நாங்கள் சாலையில் கொட்டி போராட்டம் நடத்தி வருகிறோம்’’ என்றனர். இந்த தகவலறிந்த வழங்கல் துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தினர். பிறகு பொதுமக்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், ‘ இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் 517 ரேஷன் கடைகள் மூலம் மாவட்டம் முழுவதும் 3.24 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங் கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் சில இடையூறுகள் ஏற்படுகின்றன. அவை சரி செய்யப்பட்டு வருகின்றன. மோட்டூர் ஊராட்சியில் மிளகு பாக்கெட்டில் பருத்தி கொட்டை இருப்பதாக வந்த புகாரின் பேரில் அங்கு சென்று ஆய்வு செய்தேன். உடனடியாக பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டது. பிறகு, உணவு பொருட்கள் வைக்கப்பட்ட கிடங்கில் ஆய்வு மேற் கொண்டு, மிளகு பாக்கெட் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தரமற்ற பொருட் கள் வழங்கியதாக கூறிய குடும்ப அட்டைதாரர்களுக்கு மீ்ண்டும் பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x