பிரதமர் குறித்து டிவி நிகழ்ச்சியில் விமர்சனம்: குழந்தைகளை அவ்வாறு பேசத் தூண்டியது கண்டனத்துக்குரியது: அண்ணாமலை

கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியில் பாஜக சார்பில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியில் பாஜக சார்பில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
Updated on
2 min read

கோவை: பிரதமர் குறித்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அரசியல் கருத்துகளைப் பேசுமாறு குழந்தைகளைத் தூண்டியது கண்டனத்துக்குரியது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியில் பாஜக சார்பில் பொங்கல் விழா இன்று (ஜன.17) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறுகையில், '' டெல்லியில் ஒவ்வொர் ஆண்டும் ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்புக்குப் பாதுகாப்புத்துறை அமைச்சகம்தான் பொறுப்பு. அந்த அணிவகுப்பு நடைபெறுவதற்கு 6 மாத காலத்துக்கு முன்பாகவே ஒரு குழுவை அமைக்கின்றனர். அந்தக் குழுவிடம் ஒவ்வொரு மாநிலம் சார்பிலும் எதுபோன்ற அலங்கார ஊர்தி இடம்பெறும் எனத் தெரிவிப்பார்கள்.

இந்நிலையில், பாரதியார், வ.உ.சிதம்பரனார், வேலுநாச்சியாரின் உருவங்கள் கொண்ட தமிழக அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் உலக அளவில் தெரியாத தலைவர்கள் என்பதால் மத்திய அரசு அனுமதி மறுத்ததாகக் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம் அல்ல. அதுபோன்று மத்திய அரசோ, அதிகாரிகளோ தெரிவிக்கவில்லை. எனவே, மத்திய அரசுடன் பேசி, நிராகரிக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை அறிந்து ஊடகங்கள் வாயிலாகத் தெரிவிக்கப்படும்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சியில் குழந்தைகள் தெரிவித்த கருத்துகளைக் கருத்து சுதந்திரம் என எடுத்துக்கொள்ளக் கூடாது. அது, குழந்தைகளைப் பாதுகாக்கும் என்.சி.பி.சி.ஆர் அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது. அரசியல் கருத்துகளைக் குழந்தைகள் மூலமாக திணிப்பதற்கு அதில் அனுமதி இல்லை. குழந்தைகளை அவ்வாறு பேசத் தூண்டியது கண்டனத்துக்குரியது. இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனை நாங்கள் சட்ட ரீதியாக அணுக உள்ளோம். முதல் கட்டமாக, பொது அரங்கில் மன்னிப்பு கோர வேண்டும் என அந்தத் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குநருக்கு கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 30 முக்கியச் சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கும் முடிவு ஏற்படையது அல்ல. இதனைக் கண்டித்து வரும் 21-ம் தேதி பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும். எனவே, மாநகராட்சி நிர்வாகம் அந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் வரும் தேர்தலில் மக்கள் இதற்கு பதிலடி கொடுப்பார்கள். பொங்கல் தொகுப்பில் உருப்படியாக ஒரு வெல்லத்தை வாங்கி இந்த அரசால் மக்களுக்கு அளிக்க முடியவில்லை. விஞ்ஞான ஊழலுக்கு திமுகவினர் எப்போதும் விஞ்ஞான பூர்வமாக விளக்கம் அளிப்பார்கள்.

எந்த முரண்பாடும் இல்லாத கூட்டணியாக பாஜக, அதிமுக கூட்டணி உள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணியில்தான் குழப்பம் உள்ளது. தலைவரே இல்லாத காங்கிரஸ் கட்சி விரைவில் காணாமல் போய்விடும்'' என்று அண்ணாமலை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநகர், மாவட்டத் தலைவர் நந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.எஸ். செல்வகுமார், மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in