

திருப்பூர்: அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த பாஜக சார்பில் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் சங்கத் தலைவர் பேசும் ஆடியோ வைரலானதைத் தொடர்ந்து பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் கடந்த 4 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்தது. இந்த நிலையில் நடப்பாண்டில் 5-ம் ஆண்டாக ஜல்லிக்கட்டு நடத்த, அலகுமலை ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் சங்கத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி எப்போது நடக்கும் என, மாவட்ட நிர்வாகம் உறுதியான தகவல் வெளியிடவில்லை. இது காளை வளர்ப்பாளர்கள், ஜல்லிக்கட்டுப் பார்வையாளர்கள் என பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பழனிசாமி, திருப்பூர் பாஜக பொறுப்பாளர் ஆகியோர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஆடியோ பேச்சு:
அலகுமலை ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பழனிசாமி ஆடியோவில் பேசுகையில், ''குட்டையை மூடிவிட்டு நாங்கள் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தவில்லை. இது தவறான தகவல். எந்தக் குட்டையை மூடினோம் எனப் பொதுத்தளத்தில் தகவல் அளித்தால் அதற்கு விளக்கம் அளிக்க உள்ளோம். குட்டை இல்லாத இடத்தில் ஆதாரமற்ற தகவலைப் பரப்புவது எந்த விதத்தில் நியாயம்? நாங்கள் குட்டையை மூடியிருந்தால், சாலை மறியல், உண்ணாவிரதப் போராட்டங்களை பாஜக தரப்பில் முன்னெடுங்கள். ஆனால் அப்படி ஒரு சம்பவமே நடக்காதபோது, பழியைச் சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்? நீங்கள் மனசாட்சிப்படி சொல்லுங்கள்'' எனக் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து அதே ஆடியோவில் பதில் தெரிவிக்கும் ஒரு பாஜக பிரமுகர், ''இனி பார்த்து சரிசெய்து கொள்கிறோம்'' என்றார்.
பாஜக மறுப்பு
பாஜக வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல் 'இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறுகையில், ''நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. ஜல்லிக்கட்டுப் போட்டியை நாங்கள் எதிர்க்கவில்லை. எங்கள் கட்சியின் அலகுமலை பாஜக பொறுப்பாளர், ஆட்சியர் உட்பட அனைவரிடம் புகார் மனு அளித்திருந்தார். இது தொடர்பாக கட்சியில் விசாரிக்கச் சொல்லி உள்ளோம். முகநூலில், கிரிக்கெட் போன்று ஜல்லிக்கட்டை நடத்தக் கூடாது. கொங்கு மண்ணின் பிரசித்தி பெற்ற விளையாட்டாக ஜல்லிக்கட்டை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு'' என்று தெரிவித்தார்.