

சென்னை: தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மழை தொடர்ச்சியாக பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.