Published : 17 Jan 2022 12:15 PM
Last Updated : 17 Jan 2022 12:15 PM

இலங்கை கடற்படையினரால் மீனவர்களுக்கு இனிமேல் எவ்வித பாதிப்பும் இருக்கக் கூடாது: ஜி.கே.வாசன்

கோப்புப் படம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் மீனவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாதவாறு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு, இலங்கை அரசுக்குப் பொருளாதார உதவிகள் செய்வது ஒரு புறம் என்றால் மறுபுறம் இந்திய மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு இலங்கை அரசால் பாதிப்பு இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும். அண்டை நாடான இலங்கை அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கின்ற வேளையில், இலங்கையில் வாழும் மக்கள் நலன் காக்க இந்திய அரசு உதவிக்கரம் நீட்டுவது வரவேற்கத்தக்கது.

குறிப்பாக கரோனா கால பாதிப்பால் இலங்கை நாட்டில் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரம் உள்ளிட்ட பல அடிப்படைத் தேவைகளுக்காக இலங்கைக்கு 1 கோடி டாலர் கடனுதவி அளிப்பது, இந்தியாவிடம் இருந்து 50 கோடி டாலர் எரிபொருள் இறக்குமதி செய்வது, ‘சார்க் கரன்சி’ பரிமாற்றத் திட்டப்படி, 40 கோடி டாலரை இலங்கைக்குக் கடன் கொடுப்பது ஆகிய விவரங்கள் மனிதாபிமான அடிப்படையில் பேசப்பட்டது.

இப்படி மத்திய அரசு, இலங்கை அரசுக்கு அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கப் பொருளாதார உதவிகள் செய்ய முன்வருவதும், அந்நாட்டின் எண்ணெய் சேகரிப்பு கிடங்கை நவீனப்படுத்த இணைந்து செயல்பட்டதும் இரு நாட்டின் நட்புறவு மேம்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக.

இத்தகைய நல்லெண்ண உறவை இலங்கை அரசுக்கு இந்தியா உணர்த்த வேண்டும். அதாவது இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது இலங்கை கடற்படையினர் தாக்குவதால் மீன்பிடிச் சாதனங்களும், படகுகளும் சேதமுறுவதும், அவ்வப்போது மீனவர்கள் உயிரிழப்பதும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை மத்திய அரசு கண்டிப்போடு இலங்கை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

மேலும் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 68 பேரை உடனடியாக விடுவிக்கவும், படகுகளை ஒப்படைக்கவும் வலியுறுத்த வேண்டும். எனவே மத்திய அரசு, தற்போது பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு உதவிகள் செய்யும். அதே சமயம் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கும்போது மனிதாபிமான அடிப்படையில் இலங்கை கடற்படையினரால் மீனவர்களுக்கு இனிமேல் எவ்வித பாதிப்பும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில் இலங்கை அரசோடு பேச வேண்டும் என்று தமாகா சார்பில் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x