

சென்னை: தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 165 அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள அரசுப் பள்ளிகள் கண்டறியப்பட்டு, தேவைக்கேற்ப தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வரும் 2022-23கல்வி ஆண்டுக்கான வரைவு திட்டம் தயாரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, தரம் உயர்த்தப்பட வேண்டிய உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் கருத்துருக்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அவற்றின் அடிப்படையில், 165அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம்உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு தேவையான கூடுதல் வகுப்பறைக்கான இடம், கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை முழுமையாக ஆய்வு செய்து விவரஅறிக்கை சமர்ப்பிக்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்த பிறகு,முதல்வரின் ஒப்புதல் பெற்று,பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கான அரசாணை வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.