

சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவோரின் வசதிக்காக தமிழகம் முழுவதும் இன்று முதல் 10,409 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 16,709 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் ஏராளமானோர் கடந்த வாரம் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். குறிப்பாக, சென்னையில் இருந்து மட்டும் சுமார் 5 லட்சம் பேர் அரசு பேருந்துகள் மூலம் புறப்பட்டு சென்றனர்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை தொடர்ந்து, இன்று 17-ம் தேதியும்அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் இன்று முதல் புறப்படத் தொடங்குவார்கள். இதைகருத்தில் கொண்டு, ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு, பணியிடங்களுக்கு திரும்புவோருக்கு வசதிக்காக 17-ம் தேதி (இன்று) அதிகாலை முதல் 19-ம் தேதி வரை வழக்கமான பேருந்துகளோடு சிறப்பு பேருந்துகளையும் இயக்க உள்ளோம். மேற்கண்ட நாட்களில் தமிழகம் முழுவதும்10,409 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 16,709 பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய வழித்தடங்களில் 24 மணி நேரமும் செல்லும் வகையில் பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னை திரும்புவோர் பெரும்பாலும் புறநகர் மின்சார ரயில்கள் மூலம் தங்கள் இருப்பிடம் செல்வார்கள். அவர்களது வசதிகருதி, தொலைதூரங்களில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளையும் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.