

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்றுநடக்கிறது. கரோனா கட்டுப்பாடுகளுடன் போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரைமாவட்டத்தில் 3 நாட்கள் தொடர்ந்துநடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்குபல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
முழு ஊரடங்கு
இந்த கடும் கட்டுப்பாடுகளுடன் அவனியாபுரத்தில் கடந்த 14-ம் தேதியும் பாலமேட்டில் 15-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூரில் வழக்கமாக காணும்பொங்கல் அன்றுதான் ஜல்லிக்கட்டு நடக்கும். ஆனால், காணும் பொங்கல் நாளான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) நடக்கிறது.
தமிழகம் முழுவதும் இருந்துசிறந்த காளைகள், சிறந்த மாடுபிடி வீரர்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்பர். இதனால் மற்ற ஊர்களைவிட இங்குநடக்கும் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்.
இந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகளால் காளையும், மாடுபிடி வீரரும் ஒரு ஜல்லிக்கட்டில் மட்டுமேபங்கேற்க அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்காத காளைகளும், வீரர்களும் மட்டுமே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்பர்.
இந்த ஆண்டு புதுமையாக அலங்காநல்லூர் வாடிவாசல் வழியே அவிழ்த்து விடப்படும் அனைத்து காளைகளுக்கும், காளைகளை அடக்க களம் இறங்கும் அனைத்து மாடுபிடி வீரர்களுக்கும் தங்கக் காசு பரிசாக வழங்கப்படும் என்று வணிக வரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி அறிவித்துள்ளார்.
காளைகள் வெற்றி பெற்றால் அதற்கு சிறப்புப் பரிசுகளும், சிறப்பாக காளைகளை அடக்கும் சிறந்த வீரர்களுக்கும் ஏராளமான பரிசுகளும் காத்திருக்கின்றன.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இன்று காலை தொடங்கி வைக்கின்றனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். டிஐஜி, தென்மண்டல ஐஜி, எஸ்பி ஆகியோர் தலைமையில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
முதல்வர் சார்பில் கார் பரிசு
செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.மூர்த்தி கூறும்போது, ‘‘அரசுவழிகாட்டுதல், கரோனா கட்டுப்பாடுகளுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு தொடங்கும். இதில்300 வீரர்கள், 1,000 காளைகள் பங்கேற்க உள்ளன. சிறந்த காளைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்படும்.சிறந்த மாடுபிடி வீரருக்கு உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ சார்பாககார் பரிசாக வழங்கப்படும்’’ என்றார்.