Published : 17 Jan 2022 07:30 AM
Last Updated : 17 Jan 2022 07:30 AM

பழநி தைப்பூச திருவிழாவில் இன்று திருக்கல்யாணம்: தேரோட்டத்தில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை

பழநி: பழநி தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்றும், தேரோட்டம் நாளை மாலையும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை.

பழநியில் தைப்பூசத் திருவிழா ஜன.12-ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஜன.18 வரை வழிபாட்டு தலங்களுக்குசெல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் மலைக் கோயில் அடிவாரத்தில் தரிசனம் செய்துவிட்டு திரும்புகின்றனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று இரவு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை.

தைப்பூசமான நாளை மாலை 4.45 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரில் எழுந்தருளி, ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால் கோயில் ஊழியர்களை மட்டும் வைத்து முதன்முறையாக சிறிய மரத் தேரில் தேரோட்டம் நடைபெற உள்ளது

வடலூரில் கொடியேற்றம்

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா நாளை (ஜன.18) நடைபெற உள்ளது. நாளை காலை 6 மணி, 10, நண்பகல் 1, இரவு 7, 10 மற்றும் மறுநாள் காலை 5.30 மணி ஆகிய ஆறு காலங்களில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, இன்று (ஜன.17) காலை 7.30 மணி தருமச்சாலையிலும், 10 மணி அளவில் சத்திய ஞான சபையில் கொடியேற்றம் நடக்கவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாகம் செய்து வருகிறது. கரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சபை வளாகத்தில் கரோனா விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x