Published : 17 Jan 2022 07:11 AM
Last Updated : 17 Jan 2022 07:11 AM

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மேலும் 535 களப்பணியாளர்கள் நியமனம்

சென்னை: சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 54,685 ஆக உயர்ந்துள்ளது. அவர்களுக்கு உதவ கூடுதலாக 535 கரோனா களப்பணியாளர்களை மாநகராட்சி நியமித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது. 15-ம் தேதி ஒரேநாளில் 8,978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 54,685 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக கூடுதலாக கரோனா களப்பணியாளர்களை மாநகராட்சி நியமித்துள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்வதற்காக வார்டுக்கு 5 களப்பணியாளர்கள் வீதம் 200 வார்டுக்கு 1000 பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் மற்றும் உணவுகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் நேரடியாக அவர்களின் வீட்டுக்கே சென்று வழங்கி வருகின்றனர். மேலும், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா என தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர்.

சென்னை மாநகரில் தற்போது கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

எனவே, ‘தொற்று பாதிப்பு அதிகமுள்ள மேற்குறிப்பிட்ட 7 மண்டலங்களில் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்காக கூடுதலாக வார்டுக்கு 5 களப்பணியாளர்கள் வீதம் 535 களப்பணியாளர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கெனவே உள்ள 1000 கரோனா களப்பணியாளர்களுடன் கூடுதலாக 535 களப்பணியாளர்களும் சேர்த்து தற்போது 1,535 களப்பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x