Published : 17 Jan 2022 07:07 AM
Last Updated : 17 Jan 2022 07:07 AM

இணைப்பு பேருந்து வசதி ஏற்படுத்தாததால் வெளியூர்களில் இருந்து சென்னை வந்த பயணிகள் வீடு திரும்ப முடியாமல் தவிப்பு: ஆட்டோக்களில் பல மடங்கு கட்டணம் வசூல்

சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலையில் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், வெளியூர் பயணிகள் அவர்களின் இருப்பிடத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்றும் 2-வது ஞாயிறுக்கிழமையில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்படி, சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருப்பினும், விரைவு ரயில்கள், விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. மெட்ரோ ரயில்களும் இயக்கப்படவில்லை. அதுபோல், குறிப்பிட்ட அளவுக்கு புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டன.

இதற்கிடையே, வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து ரயில்கள், விமானங்களில் புறப்பட்டு சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் ஏராளமான மக்கள் வந்திருந்தனர். ஆனால், அவர்கள் தங்களின் வீடுகளுக்கு செல்ல போதிய இணைப்பு பேருந்து வசதி இயக்கப்படவில்லை.

குறிப்பாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேட்டில் வந்த இறங்கிய பொதுமக்கள் மாநகர பேருந்து, ஆட்டோ வசதிக்காக காத்திருந்தனர். எந்தவித வாகனங்களும் கிடைக்காததால், கடும் அவதிக்குள்ளாகினர்.

மக்கள் அவர்களின் வீடுகளுக்கு செல்ல, தங்கள் வாகனம், வாடகை வாகனத்தில் செல்ல காவல்துறை அனுமதி அளித்து இருக்கிறது. இருப்பினும், ஆட்டோ, கால்டாக்சி உள்ளிட்ட செயலி முன்பதிவும் கிடைக்கவில்லை.

பெரும்பாலான வாகனங்கள் ஓடாததால், மக்களுக்கு இந்த வசதி கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருக்கும் ஆட்டோக்களில் தங்களது டிக்கெட்டுகளை காண்பித்து பல மடங்கு கட்டணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

பயணிகள் அவதி

இதுதொடர்பாக பயணிகள் தரப்பில் கூறியது: விரைவு ரயில்கள், விமானங்களில் இருந்து வருபவர்கள் எந்தவித இடையின்றி தங்களது டிக்கெட்டுகளை காண்பித்து வீடுகளுக்கு செல்லலாம் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், சில இடங்களில் போலீஸாரின் நெருக்கடியால் வெளி இடத்தில் இருந்து வரும் ஆட்டோக்களை இயக்க தயங்குகின்றனர். வந்தாலும் பல மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.

விரைவு ரயில்களை இயக்கும் நிலையில், மெட்ரோ ரயில்களையும் மாநகர பேருந்துகளையும் இயக்கவில்லை மக்கள்தங்களது வீடுகளுக்குச் செல்்ல தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டாமா. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே, இனியாவது முக்கிய வழித்தடங்களில் கணிசமாக மாநகர பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

விரைவு ரயில்களை இயக்கும் நிலையில், மெட்ரோ ரயில்களையும் மாநகர பேருந்துகளையும் இயக்கவில்லை. மக்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டாமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x