Published : 17 Jan 2022 07:12 AM
Last Updated : 17 Jan 2022 07:12 AM

சட்டக் கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்திய புகாரில் 2 போலீஸார் இடமாற்றம்

சென்னை: சட்டக் கல்லூரி மாணவரை சரமாரியாக தாக்கிய விவகாரம் தொடர்பாக 2 காவலர்களை கட்டுப்பாட்டு அறைக்கு காவல் ஆணையர் இடமாற்றம் செய்துள்ளார்.

வியாசர்பாடி புதுநகர், 8-வது தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகீம். சட்டம் பயின்று வருகிறார். இவர் கடந்த 14-ம் தேதி நள்ளிரவு 12.15 மணியளவில் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கொடுங்கையூர் எம்ஆர் நகர் சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார் அப்துல் ரகீமை மறித்து, முகக்கவசம் சரியாக அணியவில்லை எனக் கூறி அபராதம் விதித்துள்ளனர். இதற்கு அப்துல் ரகீம் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து நடந்தே கொடுங்கையூர் காவல் நிலையம் சென்ற அப்துல் ரகீமிடம் அபராதம் கட்ட கூறியதால் போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கைகலப்பு நடந்ததாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த போலீஸார் மாணவரை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், அவர் படுகாயம் அடைந்துள்ளார். மேலும், காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையறிந்த அப்துல் ரகீமின் பெற்றோர், நண்பர் தரப்பினர் காவல் நிலையம் சென்று கேட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மாணவரை தாக்கிய விவகாரம் தொடர்பாக உத்திரகுமரன், பூமிநாதன் ஆகிய 2 காவலர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டனர்.

மாணவரை உள்ளாடையுடன் தனி அறையில் அடைத்து வைத்ததாகவும், போலீஸாரின் ஷூவை சுத்தம் செய்ய வைத்ததாகவும் பெற்றோர் தரப்பில் புகார் கூறப்படுகிறது. தொடர்நது விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x