அனைத்து சாதியினரும் தகனம் செய்ய வசதியாக பல்லாவரத்தில் எரிவாயு தகன மேடை வேண்டும்: தாம்பரம் மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

அனைத்து சாதியினரும் தகனம் செய்ய வசதியாக பல்லாவரத்தில் எரிவாயு தகன மேடை வேண்டும்: தாம்பரம் மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை
Updated on
1 min read

பல்லாவரம்: பல்லாவரம் அருகே கல்யாண ராமன் தெருவைச் சேர்ந்த மூ.கண்ணம்மாள் (66) என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இவர்நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இந்நிலையில் கண்ணம்மாள் உடலை ஜமீன் பல்லாவரத்தில் வாத்தியார் மாணிக்கம் தெருவில் உள்ள இடுகாட்டில் எரிக்க உறவினர்கள் முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை உடலை எரிப்பதற்காக வெட்டியானிடம் பணம் கொடுத்து அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும்படி தெரிவித்தனர். இதனையடுத்து அவரும் உடலை எரிக்க ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் இடுகாட்டின் வாயிற்கதவை மூடினர். இங்கு உடலை எரித்தால் சுகாதாரக் கேடு ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இடுகாட்டின் நுழைவு வாயிலுக்கு அவர்கள் பூட்டுப் போட்டு பூட்டியதாகவும் தெரிகிறது. அதேபோல் இடுகாட்டில் யாரும் நுழையா வண்ணம் வாகனத்தை இடையில் நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து, தகவலறிந்த பல்லாவரம் ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கண்ணம்மாளின் உறவினரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து குரோம்பேட்டையில் இறுதிச் சடங்கு செய்தனர். இந்த இடுகாட்டைச் சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால் இடுகாட்டை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் வி.சந்தானம் கூறியதாவது: பல்லாவரத்தில் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு மயானம் காலங்காலமாக இருந்து வருகிறது.

நாளடைவில் மயானத்தைச் சுற்றி குடியிருப்புகள் தோன்றி விட்டன. இதனால் இந்த இடுகாடு, அருகே குடியிருப்பவர்களுக்கு இடையூறாக இருப்பதாக சிலர், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சட்டப்படி மயான இடத்தை வேறு எந்த பயன்பாட்டுக்கும் மாற்ற முடியாது. அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வாக அந்த இடத்தில் அனைத்து சாதியினரும் தகனம் செய்ய வசதியாக எரிவாயு தகன மேடை அமைக்க தாம்பரம் மாநகராட்சி முன்வர வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in