மக்கள் பாதிக்கும் வகையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை மூடக்கூடாது: ஜிப்மர் நிர்வாகத்துக்கு ஆளுநர் உத்தரவு

மக்கள் பாதிக்கும் வகையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை மூடக்கூடாது: ஜிப்மர் நிர்வாகத்துக்கு ஆளுநர் உத்தரவு
Updated on
1 min read

மக்கள் பாதிக்கும் வகையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை மூடக்கூடாது என்று ஜிப்மர் நிர்வாகத்துக்கு ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஜிப்மருக்கு புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழகப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக வருவார்கள். இச்சூழலில் நாளை முதல் தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவைகளை தொடங்க முடிவு செய்துள்ளதாக ஜிப்மர் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே இம்முறையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளான சூழலில், தற்போது மீண்டும் இம்முறை அமலாக மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். தொடர் சிகிச்சையில் இருக்கும் பலரும் ஜிப்மரின் இம்முடிவால் கடும் பாதிப்புக்கு உள்ளாவதாக புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை, ஜிப்மர் நிர்வாகத்தைத்தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தார். அதற்கு ஜிப்மர் நிர்வாகத் தரப்பில், “ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு முற்றிலுமாக மூடப்படவில்லை. ஆனால் கரோனா நோயாளிகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் ஒரு துறைக்கு 50 பேர் வீதம் முன்பதிவு செய்து வரும் நோயாளிகள் அனுமதிக்கப்படுவர். சாதாரண நோய் அறிகுறி உள்ளவர்கள் தொலை மருத்துவ முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்” என்று குறிப்பிட்டது.

இதையடுத்து ஜிப்மர் நிர்வாகத்துக்கு ஆளுநர் தமிழிசை பிறப்பித்துள்ள உத்தரவில், “பொதுமக்கள் பாதிப்படையும் அளவிற்கு புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவை மூடக்கூடாது. பொதுமக்களுக்கான மருத்துவ சேவை எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் வழிமுறைகளை கையாள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in