

ராமேசுவரம்: தனுஷ்கோடி கடற்கரையில் பாட்டில் ஜெல்லி மீன்கள் ஒதுங்கி வருவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனுஷ்கோடி கடற்கரையை கண்டு ரசிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சில நாட்களாக பாட்டில் ஜெல்லி மீன்கள் தனுஷ்கோடி கடற்கரையில் ஒதுங்குவது அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தனுஷ்கோடி கடலில் கரை ஒதுங்கியவை பாட்டில் ஜெல்லி மீன்கள் ஆகும். இந்த ஜெல்லி மீன்களின் உடல் பாட்டில் போன்று இருப்பதால் இப்பெயர் உண்டானது. இந்த ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கினாலும் சில மணி நேரம் உயிருடன் இருக்கும். இவை தனுஷ்கோடி கடல் பகுதியில் கரை ஒதுங்குவது இதுவே முதல் முறை யாகும்.
இந்த ஜெல்லி மீன்களை தொட்டால் மனிதர்களுக்கு கடுமையான ஒவ்வாமை, தோல் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். கடந்த 2018-ம் ஆண்டு மும்பை கடற்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கின. ஜெல்லி மீன்களைத் தொட்டு விளையாடிய அந்தப் பகுதி மக்கள் 150 பேருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது,
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, கடந்த வாரம் பாம்பன் கடற்கரையில் ஊதா பட்டன் ஜெல்லி மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.