

தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் மட்டும் இன்று முதல் 7 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனால், தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.12 கோடி கூடுதல் செலவாகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள 42 சுங்கச்சாவடிகளில் குறிப்பிட்ட 21 சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டு இன்று அமலுக்கு வருகிறது. அதன்படி, வானகரம், சூரப்பட்டு, கிருஷ்ணகிரி, கப்பலூர், நாங்குநேரி, எட்டூர் வட்டம், பாலைபுத்தூர், பூதக்குடி, சிட்டம்பட்டி, பள்ளிகொண்டா, வாணியம்பாடி, பெரும்புதூர், வாலாஜா, வாகைகுளம், பரனூர், ஆத்தூர், பட்டறை பெரும்புதூர், எஸ்.வி.புரம், லட்சுமணப் பட்டி, லெம்பலாக்குடி, தனியூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் சாலைகளின் தொலைவு, வசதி களுக்கு ஏற்றவாறு கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு போக்கு வரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் சேவை நோக் குடன் இயக்கப்படுகின்றன. தினமும் இயக்கப்படும் 22 ஆயிரத்து 580 பேருந்துகளில் இரண்டரை கோடி மக்கள் பயணம் செய்கின்றனர்.
ஏற்கெனவே, போக்குவரத்துக் கழகம் பெரும் நஷ்டத்தில் செயல்படுகிறது. இதற்கிடையே, ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வரும் சுங்கச்சாவடி கட்டணத்தால் மேலும் இழப்பு ஏற்படுகிறது. இன்று முதல் 21 சுங்கச்சாவடிகளுக்கு கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இதனால், அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.12 கோடி கூடுதல் செலவாகும்.
விலக்கு அளிக்க வேண்டும்
ஏற்கெனவே, ஆண்டொன் றுக்கு சுமார் ரூ.100 கோடி கட்டணம் செலுத்தி வருகிறோம். எனவே, மக்களின் நலனை கருத்தில்கொண்டு அரசு பேருந்துகளுக்கு சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’’ என்றனர்.