

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி. மலை மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக் கிழமை (நேற்று) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தமிழகத்தில் கரோனா 3-வது அலை ஏற்பட்டதை தொடர்ந்து, கரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வரு கின்றன. கடந்த 6-ம் தேதி முதல் இரவு நேர ஊடரங்கு மற்றும் கடந்த ஞாயிற் றுக்கிழமை (ஒரு நாள் மட்டும்) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
2-வது முறையாக ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு நேற்று கடை பிடிக்கப்பட்டது. முக்கிய சாலைகளில் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டன.
வேலூர் மாவட்டம் நகரப்பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. வேலூர் மக்கான் சந்திப்பு, அண்ணா சாலை, ஆரணி ரோடு சந்திப்பு, தொரப்பாடி சாலை சந்திப்பு, பாகாயம் கூட்டுச்சாலை, வேலூர் கிரீன் சர்க்கிள், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம், ஆட்சியர் அலுவலகம் எதிரே தடுப்புகளை அமைத்த காவலர்கள் அவ் வழியாக வந்த வாகனங்களை மடக்கி, அவசியமில்லாமல் வெளியே வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர்.
பொங்கல் பண்டிகையின் கடைசி விழாவான காணும் பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது. இதனால், உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டுக்கு செல்ல முயன்றவர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். குடியாத்தம், பேரணாம்பட்டு, கணியம்பாடி, அப்துல்லாபுரம், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் சகஜமாக சுற்றித்திரிந்தனர்.
முழு ஊரடங்கையொட்டி மருத்துவ மனைகள், மருந்தகம், ஆவின், பெட்ரோல் பங்க் ஆகியவை மட்டும் நேற்று திறந்திருந்தன. காய்கறி, மளிகைக்கடை, ஜெனரல் ஸ்டோர்ஸ் ஆகியவை மூடியிருந்தன. இறைச்சி மற்றும் மீன் கடைகள் மூடியிருந்தாலும், பல்வேறு இடங்களில் ஆட்டிறைச்சியும், கோழி இறைச்சியும் மறைமுகமாக விலை ஏற்றத்துடன் விற்பனையானது. காணும் பொங்கல் என்பதால் இறைச்சி விற் பனையை காவல் துறையினர் கண்டு கொள்ளவில்லை.
முழு ஊரடங்கை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 650 காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். நேற்று காணும் பொங்கல் என்பதால் சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என காவல் துறை சார்பில் எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும், கரோனா ஊரடங்கு காரணமாக அமிர்தி பூங்கா, கோட்டை பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் நேற்று மூடப்பட்டிருந்தன. கோட்டை நுழைவு வாயில் அருகே காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நகர் பகுதிகளில் முழு ஊரடங்கையொட்டி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதேநேரத்தில் ஊரகப்பகுதியில் பொது மக்கள் சர்வசாதாரணமாக வெளியே சுற்றித்திரிந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிக மாகவே காணப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கிராமப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் ஒரு சில பகுதிகளில் இருந்தன. நகரப் பகுதி களில் காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட சோதனைச்சாவடிகள் அமைத்து 1,000 காவலர்கள் ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். முழு ஊரடங்கால் முக்கிய சாலைகள் வெறிச்சோடின. சோதனைச்சாவடிகளில் கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணித்தவர்களிடம் விசாரணை நடத்திய பிறகே தொடர்ந்து செல்ல அனுமதி அளித்தனர். அத்தியா வசியம், அவசியம் இல்லாமல் சுற்றிய வர்களுக்கு அபராதம் விதித்தனர்.
செங்கம், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, போளூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காணும் பொங்கல் விழாவையொட்டி கோயில்கள், சுற்றுலாத்தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல முடியவில்லை. ஊரடங்கால் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். சாத்தனூர் அணை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் நேற்று வெறிச்சோடின. மாவட்டத்தில் உட்கோட்ட அளவில் டிஎஸ்பிக்கள் தலைமையிலான காவலர்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை நகரில் எப்பேதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய வீதிகளான தேரடி வீதி, பெரிய தெரு, போளூர் சாலைகள் வெறிச்சோடின.
ஊரடங்கில் வெளியில் சுற்றுபவர்களை காவல் துறையினர் ‘ட்ரோன் கேமரா’ உதவியுடன் கண்காணித்தனர். நகரில் ஊரடங்கு கண்காணிப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் நேரில் ஆய்வு செய்தார்.