தமிழகத்தில் அரசு அனுமதி இல்லாத கரோனா பரிசோதனை கிட் பயன்பாடு அதிகரிப்பு

தமிழகத்தில் அரசு அனுமதி இல்லாத கரோனா பரிசோதனை கிட் பயன்பாடு அதிகரிப்பு
Updated on
1 min read

கோவை: கரோனா இரண்டாம் அலையைவிட மூன்றாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி 6,983-ஆக இருந்த தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை, இன்று (ஜன.16) 23,975 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டோரை கண்டறிய தமிழக அரசால் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொற்று எண்ணிக்கை அதிகரிப்பைத் தொடர்ந்து, தனியார் மருந்தகங்களில் சுய கரோனா பரிசோதனை கிட் (ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்) விற்பனையும் அதிகரித்துள்ளது.

அதை வாங்கி பயன்படுத்த எந்தவித கட்டுபாடும் இல்லாததால், மருந்தகங்களில் ஒரு கிட்-ஐ ரூ.250-க்கு விற்பனை செய்து வருகின்றனர். இதுதவிர, பிரபல ஆன்லைன் வர்த்தக, பார்மசி தளங்களிலும் 15 நிமிடங்களில் முடிவு தெரிந்துகொள்ளலாம் என்றும், மருந்தகங்களை விட சற்று விலை குறைத்தும் விளம்பரப்படுத்தி விற்பனை செய்கின்றனர். ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை விட இதற்காகும் செலவு குறைவு என்பதாலும், வீட்டிலேயே பரிசோதனை செய்துகொள்ள முடியும் என்பதாலும் பலர் இதை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஆனால், பெரும்பாலானோருக்கு அந்த கிட்-ஐ எப்படி முறையாக பயன்படுத்த வேண்டும் என்றே தெரியதாததால், தவறான முடிவுகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மேலும், 'ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்' முடிவு துல்லியமாக இருக்காது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சுய பரிசோதனை முடிவு தவறாக இருந்து, அவர் தனக்கு கரோனா இல்லை என்று கருதி வெளியில் சுற்றினால், பலருக்கும் தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே, சுய பரிசோதனை கிட் விற்பனையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கட்டுப்படுத்த நடவடிக்கை

இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “தமிழகத்தைப் பொருத்தவரை கரோனா சிகிச்சைக்காக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 'ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்' முடிவை எங்கும் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே, வீட்டிலேயே பொதுமக்கள் சுயமாக பரிசோதனை செய்துகொண்டு, தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். தொற்று அறிகுறிகள் இருந்தால், முறையாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்-ஐ அனுமதித்த மாநிலங்களில், தொற்று அறிகுறிகள் இருந்து, சுய பரிசோதனை முடிவில் 'நெகட்டிவ்' என்று வந்தால், மீண்டும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்தே தொற்றை உறுதிப்படுத்துகின்றனர். எனவே, மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் தமிழகத்தில் சுய பரிசோதனை கிட் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்"என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in