Published : 27 Apr 2016 08:48 AM
Last Updated : 27 Apr 2016 08:48 AM

கொடுங்கையூர் குப்பை கிடங்கு அகற்றம், கணேசபுரம் மேம்பாலம்: வாக்குறுதிகளை அள்ளி வீசும் பெரம்பூர் தொகுதி வேட்பாளர்கள்

கொடுங்கையூர் குப்பை கிடங்கை அகற்றுவது, கணேசபுரம் சுரங்கப் பாதையில் மேம்பாலம் அமைப்பது உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை அளித்து சென்னை பெரம்பூர் தொகுதி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

1957-ல் இருந்து தனித் தொகு தியாக இருந்து வந்த பெரம்பூர், கடந்த 2008 தொகுதி மறுசீரமைப் பின்போது பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.

நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் கணிசமான அளவில் இருந்தாலும் இத்தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும் அளவுக்கு தலித்கள் குறிப்பாக தலித் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். மகாகவி பாரதியார் நகர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். பர்மாவில் இருந்து வந்தவர்கள் சர்மா நகர், பி.வி.காலனி பகுதிகளில் கணிசமான அளவில் இருக்கின்றனர்.

வாக்குப்பதிவுக்கு 19 நாட்களே உள்ள நிலையில், அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட், பாஜக, பாமக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக - பி.வெற்றிவேல்

கடந்த 2011 தேர்தலில் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற வெற்றிவேல் தற்போது பெரம்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2015-ல் ஜெயலலிதா போட்டியிட வசதியாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்றுள்ள இவருக்கு அதிமுகவினர் ஓய்வின்றி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நேற்று மகாகவி பாரதியார் நகரில் (எம்.கே.பி. நகர்) உள்ள தேர்தல் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது அவரிடம் பேசிய போது, ‘‘பின்தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் இத்தொகுதியில், 20 கிலோ இலவச அரிசி, அம்மா உணவகம், இலவச லேப்டாப் போன்ற திட்டங்களால் மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். வெள்ள நிவாரணம் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. எனவே நான் வெற்றி பெறுவது உறுதி. கணேசபுரம் சுரங்கப் பாதைக்கு மாற்றாக மேம்பாலம் கட்ட வேண்டும், கொடுங்கையூர் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்’’ என்றார். மாலையில் எம்.ஜி.ஆர். பாடல்கள் ஒலிக்கும் சிறிய வாகனம் முன்னே செல்ல எம்.கே.பி.நகரில் வீடு, வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரித்தார்.

திமுக கூட்டணி - தனபாலன்

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் பெருந் தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். மூலக்கடை சந்திப்பு, எருக்கஞ்சேரி பகுதியில் நேற்று வீடு, வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார். அவருடன் நேற்று தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த யுவராஜும் பிரச்சாரம் செய்தார்.

பாதியில் நிற்கும் மேம் பாலங்கள், மழை, வெள்ள பாதிப் புகள், கொடுங்கையூர் குப்பைக் கிடங்கால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள், கணேசபுரம் சுரங்கப் பாதையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை முன்வைத்து அவர் பிரச்சாரம் செய்கிறார். திமுக ஆட்சிக்கு வந்தால் கணேசபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டப்படும். கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு அகற்றப்படும், மழை வடிகால்கள் அமைக்கப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளை அவர் அளித்து வருகிறார்.

மார்க்சிஸ்ட் - அ.சவுந்தரராஜன்

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் அ.சவுந்தர ராஜன் நேற்று கொடுங்கையூர் மசூதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அவருடன் சிஐடியு தொழிற்சங்கத்தினர், தேமு திக, மதிமுக, தமாகா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் உடன் சென்றனர். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அவர், அரசிடம் போராடி அடித்தட்டு மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் பெற்றுத்தந்ததை சொல்லி வாக்கு சேகரிக்கிறார். மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கொடுங்கையூர் குப்பை கிடங்கு அகற்றப்படும். கணேசபுரம் மேம்பாலம் கட்டப்படும், மழை நீர் தேங்காமல் கால்வாய்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து வருகிறார்.

பாஜக - பிரகாஷ்

பாஜக சார்பில் போட்டியிடும் பிரகாஷ் நேற்று எம்.கே.பி. நகர் புதுத்தெரு பகுதியில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் இருக்கும் டிஜிட்டல் பேனர் ஒட்டப்பட்ட சிறிய வாகனத்தில், மோடி அரசின் சாதனைகளைச் சொல்லி பிரச்சாரம் செய்கிறார். எல்லோரையும் போல அவரும் மேம்பாலம், மழைநீர் வடிகால்கள், குப்பை கிடங்கு அகற்றம் போன்ற வாக்குறுதிகளை முன் வைக்கிறார்.

பாமக வேட்பாளர்

பாமக வேட்பாளர் எம்.வெங்க டேசன் பெருமாள் நேற்று காலை எம்.கே.பி.நகர் பகுதியில் கடைகள், வீடுகளில் பிரச்சாரம் செய்தார். பாமக தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்களையும், அன்புமணி ராமதாஸ் முதல்வரானால் என்ன செய்வார் என்பதையும் சொல்லி அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களின் பிரச்சாரத்தால் பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x