

சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 உட்பட 12 விண்வெளி ஆய்வு திட்டங்களை இந்த ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
நம் நாட்டுக்கு தேவையான தகவல்தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதனுடன், அறிவியல் ஆராய்ச்சியில் சந்திரயான், மங்கள்யான் உள்ளிட்ட பல்வேறு தொடர்சாதனைகளையும் செய்துவருகிறது.
இதற்கிடையே கரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக இஸ்ரோவின் செயல்பாடுகள் பெரிதும் சுணக்கமடைந்தன. கடந்த 2 ஆண்டுகளில் 5 செயற்கைக் கோள்களை மட்டுமே இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
இந்நிலையில், இந்த ஆண்டில் சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 உட்பட 12 ஆய்வுத் திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:
ஆய்வுப் பணிகளை பொருத்தவரை, மற்ற துறைகள்போல வீட்டில் இருந்தபடி பணிபுரிய இயலாது. தவிர, ககன்யான், சந்திரயான் உள்ளிட்ட அடுத்தகட்ட திட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் அதன் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த ஆண்டு 12 ஆய்வுத் திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் ஆதித்யா எல்-1, சந்திரயான்-3, எக்ஸ்போசாட், ககன்யான் விண்கல பரிசோதனை ஆகியவை முதன்மையானவை.
சூரியனின் வெளிப்புற பகுதியைஆய்வு செய்வதற்காக ஜூனில் ஆதித்யா எல்-1 விண்கலம் அனுப்பப்பட உள்ளது. சந்திரயான்-3 விண்கலம் இந்த ஆண்டு இறுதியில்ஏவப்படும். இதில் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்கான லேண்டர், ரோவர் சாதனங்கள் மட்டும் இடம்பெறும். எக்ஸ்போசாட் விண்கலம் சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது. இது விண்வெளியில் கதிர்வீச்சு தாக்கம் குறித்த ஆய்வுக்கு பயன்படும்.
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக, ஆளில்லா விண்கலம் 2 முறை விண்வெளிக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்படும். இதுதவிர, புவி கண்காணிப்பு பணிக்கான 4 இஓஎஸ், தகவல் தொடர்புக்கான 3 சிஎம்எஸ் மற்றும் ஒரு ஐஆர்என்என்எஸ் என 8 செயற்கைக் கோள்களை இந்த ஆண்டு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இஸ்ரோ - நாசா கூட்டிணைப்பில் தயாராகி வரும் ‘நிசார்’ விண்கலத்தை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அடுத்த ஆண்டு விண்ணில்செலுத்தும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனவே, இஸ்ரோவரலாற்றில் 2022-ம் ஆண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.