Published : 16 Jan 2022 07:07 AM
Last Updated : 16 Jan 2022 07:07 AM

காய்கறி, மீன் சந்தை மூடல்; உணவகங்களில் பார்சலுக்கு அனுமதி; தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு: மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் போலீஸார்

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள மீன் மற்றும் காய்கறி சந்தைகள் மூடப்பட்டிருக்கும். விதிமீறல்களை தடுக்க மாநிலம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 989 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 8 ஆயிரத்து 978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, சில தளர்வுகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னரும் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதன் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ளூர் பேருந்துகள், ஆட்டோக்கள் என சாலை போக்குவரத்து வசதிகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்படுகிறது. சென்னையில் மெட்ரோ ரயில்களின் சேவை நிறுத்தப்படுகிறது. இருப்பினும், விரைவு ரயில்கள், விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படும். அதுபோல், குறிப்பிட்ட அளவுக்கு புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானம், ரயிலில் பயணிப்பதற்காக விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்குச் செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஆனால், பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட் டுமே அனுமதிக்கப்படுவர் என காவல் துறை அறிவித்துள்ளது.

ஏற்கெனவே திட்டமிடப்பட்ட திரு மணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்குச் செல்பவர்கள் திருமண அழைப்பிதழ் களைக் காண்பித்து தங்களது பயணங் களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படு கிறது. திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். திரு மண மண்டப முன்பதிவு விவரங்களை ஏற்கெனவே அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் பெற்றுள்ளன. அதன் அடிப்படை யில் இன்று நேரில் சென்று கரோனா பாதுகாப்பு விதிகள் முறையாக கடைபிடிக் கப்படுகிறதா என ஆய்வு செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் மாநிலம் முழுவதும் உள்ள காய்கறி மற்றும் மீன் சந்தைகள், நகர்ப்புறங்களில் உள்ள இறைச்சிக்கூடங்கள், கடற்கரைப் பகுதிகள், கடை வீதிகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் என நாளை எதுவும் இயங்காது.

உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு உணவு விநியோகிக்க உணவகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று பால், மருந்து கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும்.

சென்னையில் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் செல்வதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயம்பேடு மலர், காய்கறி, பழச் சந்தை, காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை, பட்டினப்பாக்கம் மீன் சந்தைகள், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகியவையும் மூடப்படுகிறது.

சென்னையில் மட்டும் காவல்துறை சார்பில் 350 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று மேலும் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த வாகன இயக்கத்தை குறைக்க கெடுபிடிகளை அதிகரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருந்தாலோ, முறையாக அணியவில்லை என்றாலோ உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல்துறை சார்பில் ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. அவ்வாறு இதுவரை 50 லட்சம் பேரிடம் ரூ.105 கோடிக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணிவதை உறுதி செய்வதற்காக தற்போது முகக் கவசம் அணியாதோருக்கான அபராதத்தை ரூ.500 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இன்று அமலில் இருக்கும் ஊரடங்கில் வாகனத்தில் செல்வோர் யாரேனும் முகக் கவசம் அணியாமல் இருந்தால் அவர் களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

சென்னை தவிர்த்து தமிழகம் முழு வதும் மாவட்ட எல்லைகள் மற்றும் மாநில எல்லைகள் என 350 இடங்களில் சோதனைச்சாவடிகளை அமைத்து கண்காணிக்கும் பணியில் பல்லாயிரக்கணக் கான போலீஸாரை ஈடுபடுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் வெளி மாநிலப் பேருந்து களில் கோயம்பேடு பேருந்து நிலையத் துக்கு வந்த பயணிகள், வெளி மாநிலங் களில் இருந்து சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வந்த பயணிகள், கார், ஆட்டோக்கள் அதிக கட்டணம் கேட்டதால் இரவு முழுவதும் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கழித்தனர். இந்த வாரமும் அதே நிலை ஏற்படும் என்பதால் ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் புதிதாக 23,989 பேருக்கு கரோனா

சென்னை: தமிழகத்தில் புதிதாக கரோனா தொற்றால் 23,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 14,242, பெண்கள் 9,747 என மொத்தம் 23,989 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 11 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 8,978, செங்கல்பட்டில் 2,854, கோவையில் 1,732, திருவள்ளூரில் 1,478, காஞ்சிபுரத்தில் 697, திருப்பூரில் 667, கன்னியாகுமரியில் 659, மதுரையில் 550, ஈரோட்டில் 542 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 29 லட்சத்து 15,948 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 27 லட்சத்து 47,974 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 10,988 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 1,31,007 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 11 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 6 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,967 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,721 பேர் இறந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் கரோனா பாதிப்பு 23,459 ஆகவும், சென்னையில் 8,963 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x