Published : 16 Jan 2022 08:03 AM
Last Updated : 16 Jan 2022 08:03 AM

நெல் கொள்முதல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: அரசு அதிகாரிகள் உறுதி அளித்ததாக பி.ஆர்.பாண்டியன் தகவல்

காவிரி டெல்டாவில் சம்பா சாகுபடி நடைபெற்று வருகிறது. அதற்கேற்ப நெல் கொள்முதல் செய்யப்படாததால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தமிழக அரசு அதிகாரிகள் உறுதி அளித்திருப்பதாக, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நெல் கொள்முதலில் பல்வேறு பிரச்சினைகள் நீடிப்பதாக விவசாயிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில், `நெல் கொள்முதல் முன்பதிவு: விவசாயிகளை ஏன் அலைக்கழிக்கிறீர்கள்?' என்ற தலைப்பில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் எழுதிய கட்டுரை `இந்து தமிழ் திசை' நாளிதழின் நடுப்பக்கத்தில் கடந்த 14-ம் தேதி வெளியானது.

இதையடுத்து, தமிழக அரசுஅதிகாரிகள் பி.ஆர்.பாண்டியனை தொடர்புகொண்டு, நெல் கொள்முதல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

இது தொடர்பாக பி.ஆர்.பாண்டியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரி டெல்டா பகுதிகளில் பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கு இடையே, அவற்றை எதிர்கொண்டு உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன், பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் வேளாண் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 10 லட்சம்ஏக்கரில் சம்பா சாகுபடி அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன.

மகசூல் இழப்பு ஏற்பட்டாலும், கிடைப்பதை அறுவடை செய்ய வேண்டும் என்ற துணிவுடன் விவசாயிகள் அறுவடைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனவரி முதல் வாரம் பணிகள்தொடங்கின. பொங்கலுக்கு முன்ஒரு பகுதி நிலங்கள் அறுவடையாகி இருக்க வேண்டும். நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணியை விரைந்து தீவிரப்படுத்தும்போதுதான் அறுவடை செய்ய இயலும். ஆனால், பொங்கல் பண்டிகை முடியும்வரை கொள்முதல் பணி தொடங்கவில்லை.

இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து `இந்து தமிழ் திசை' பத்திரிகையில் எனது விரிவான கட்டுரை வெளியானது. இந்தக்கட்டுரையைப் படித்த தமிழகஅரசின் வேளாண் துறை முதன்மைச் செயலர் மற்றும் இயக்குநர், மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, பாதிப்புகளையும், தீர்வுகளையும் விரிவாகக் கேட்டறிந்தனர்.

பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தமிழக அரசு முயற்சித்து வருவதாகவும், தடையின்றி நெல்லைக் கொள்முதல் செய்ய வேளாண் துறை விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தது, விவசாயிகளுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

பல்வேறு வேளாண் சார்ந்த அமைப்புகளின் நிர்வாகிகளும், விவசாயிகளும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். எனவே, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, விவசாயிகள் நலன் கருதி, குறைபாடுகளையும், அதற்கான தீர்வுகளையும் கட்டுரையாக வெளியிட்ட `இந்து தமிழ் திசை' நாளிதழ் நிர்வாகத்துக்கு நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் பி.ஆர்.பாண்டி யன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x