

திருவண்ணாமலையை அடுத்த சு.கம்பப்பட்டு கிராமத்தில் டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்து வருபவர் மாபுக்கான். இவரது மனைவி தில்ஷாத். இவர்களுக்கு 5 பெண் பிள்ளைகள் உள்ளனர். மாபுக்கான் வழக்கமான பணிக்காக சென்ற நிலையில் தில்ஷாத் கூலி வேலைக்காக சென்று விட்டார்.
இதையடுத்து, வீட்டில் இருந்த ஆடுகளை மேய்ச்சலுக்காக அதே கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதிக்கு 9-ம் வகுப்பு படித்து வந்த இரட்டையர்களான நஸ்ரின் மற்றும் நசீமா, 7-ம் வகுப்பு படித்து வந்த ஷாகிரா மற்றும் 3-ம் வகுப்பு படித்து வந்த ஷப்ரின் ஆகிய 4 சகோதரிகளும் நேற்று பகல் சென்றுள்ளனர்.
அப்போது, ஆடுகளை ஏரியில் தண்ணீர் குடிக்க அழைத்துச் சென்றபோது நஸ்ரின் முதலில் ஏரியில் தவறி விழுந்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக உடன் சென்ற நசீமா, ஷாகிரா ஆகியோரும் தவறி விழுந்துள்ளனர். மூவருக்கும் நீச்சல் தெரியாததால் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கினர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஷப்ரின், ஓடிச்சென்று வீட்டின் அக்கம் பக்கம் வசிப்பவர்களிடம் நடந்த விவரத்தை கூறியுள்ளார். கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஏரியில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடத்திய தேடுதலில் 3 சிறுமிகளையும் உயிரிழந்த நிலையில் மீட்டனர்.
வெறையூர் போலீஸார் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.