

பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆள் மாறாட்டம் செய்த 2 மாடு பிடி வீரர்கள் சிக்கினர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் சுற்று முதல் 5-வது சுற்று வரை 17, 19 ஆகிய எண்களைக் கொண்ட மாடு பிடி வீரர்கள் தொடர்ந்து அதிகமான காளைகளை அடக்கி முதல், இரண்டாவது இடம் நோக்கி நகர்ந்தனர்.
இவர்கள் மீது விழாக் கமிட்டியினருக்கு சந்தேகம் எழுந்தது. இவர்களது பெயர் பதிவு ஆவணங்களை ஆய்வு செய்தபோது, 17 என்கிற எண்ணுடைய ராமச்சந்திரன் என்பவர் கார்த்திக் என்கிற பெயரிலும், 19 என்கிற எண் கொண்ட சக்கரவர்த்தி என்பவர் தமிழரசன் என்கிற பெயரிலும் போலியாக பெயர் பதிவு செய்து மாடுகளை அடக்கியது தெரியவந்தது.
நடப்பாண்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று ஜல்லிக்கட்டுகளில் ஒன்றில் மட்டுமே மாடு பிடி வீரர், காளைகள் பங்கேற்க முடியும் என்ற நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்காத வீரர்கள் மட்டுமே பாலமேட்டில் காளைகளை அடக்க அனுமதிக்கப்படுவர் என்பதால் ராமச்சந்திரன், சக்கரவர்த்தி ஆகிய இருவரும் அலங்காநல்லூருக்கு உண்மையான பெயரை பதிவு செய்த நிலையில் பாலமேட்டில் ஆள் மாறாட்டம் செய்து காளைகளை அடக்கியது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் அவர்களிடம் விசாரிக்கின்றனர்.
போட்டி விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டும் வீரர்கள் போலி பெயர்களை பதிவு செய்து ஆள் மாறாட்டம் செய்தது ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.