

ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட 4 இடங்களில் ரூ.5 கோடி மதிப்பில் சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஏற்காடு மலைமீதுள்ள 65 கிராமங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஏற்காட்டில் சவுக்கு, ரோஸ்வுட், பலா, சந்தனம் உள்ளிட்ட மரங்கள் உள்ளன. காஃபி எஸ்டேட்டில் நிழலுக்காக வளர்க்கப்படும் சவுக்கு மரங்களின் கிளைகள் மற்றும் வயது முதிர்வு, மண் அரிப்பால் விழுந்துவிடும் நிலையில் இருக்கும் மரங்களை வெட்ட ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சியர் தலைமையிலான குழு, ‘கட்டிங் ஆர்டர்’ வழங்கும். இந்த ஆர்டரை கொண்டே ஏற்காடு மலையில் மரங்களை வெட்டி, விற்பனை செய்ய முடியும்.
அண்மையில் ஏற்காட்டில் வடகிழக்கு பருவமழையின்போது கனமழையால், 4 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, ரூ.5 கோடி மதிப்பில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால், கனரக வாகனங்கள் மிகுந்த பாரத்துடன் செல்வதை தவிர்க்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியிருந்தனர். இதைமீறி ஏற்காட்டில் அதிக பாரத்துடன் மரங்களை ஏற்றிய லாரிகள் சென்று வருகிறது. இதை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் (14-ம் தேதி) அதிகபாரத்துடன் மரங்களை ஏற்றிய லாரிகள் மலைப்பாதையில் பயணமானது. இதனால், பாதை பலமிழக்கும் நிலை உள்ளது. எனவே, பாதை சீரமைப்பு பணிகள் முடியும் வரை கனரக வாகனங்கள் மலைப்பாதையில் செல்வதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதுதொடர்பாக சேலம் உதவி வன பாதுகாவலர் கண்ணன் கூறும்போது, ‘ஏற்காட்டில் 4 இடங்களில் மரம் வெட்ட, ‘கட்டிங் ஆர்டர்’ வழங்கப்பட்டுள்ளது. இம்மரங்களை வெட்டி லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனர். மண் சரிவால் பாதை பலமிழந்து இருப்பது குறித்தும், அதிக பாரத்துடன் மரலோடு வாகனங்கள் செல்லலாமா என்பது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தான் தெரியும். லாரியின் ஆக்சில் தரத்துக்கு ஏற்ப எத்தனை டன் வரை ஏற்ற அனுமதி உள்ளது என்பது தெரியவரும். மிகுதியான பாரத்துடன் மரலோடு லாரிகள் சென்றது குறித்து விசாரிக்கப்படும்” என்றார்.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் (ஏற்காடு) கூறும்போது, “அதிக மழையால் ஏற்காடு மலைப்பாதை 4 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ரூ.5 கோடியில் பாதை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் பணி நிறைவடையும். கனரக வாகனங்கள் செல்வது தொடர்பாக வனத்துறைக்கு கடிதம் அனுப்பப்படும்” என்றார்.